வண்ணமயமான நாடு


நீல வண்ணங்கள் சிதறிய சுவர்

வெள்ளை வரிகள் எழுதிய மடல்

சிவப்பு சால்வைகள் பறந்த சாலைகள்

கறுப்பு தினங்களை கடன்வாங்கிய குடிகள்

 

வண்ணமயமான வாழ்க்கை – எங்கும்

வேடிக்கை பார்க்கும் வல்லூறுக் கண்கள்,

வரண்ட நிலங்களை வட்டமிடும் நிழல்கள்,

மிரண்டு போனது எங்கள் மிதக்கும் தீவு.

 

கரண்டு வரும் வரை காத்திருக்கும் நிலை

கால்கள் வலிக்கும் வரை வரிசைகளில் – நாங்கள்

திரண்ட சாலைகள் தேவைகளால் நிறைகின்றன.

நாட்கள், மாதங்கள் நகரும் – நகரமறுக்கும் நாற்காலிகள்.

 

நய்யப்புடைத்தும், நம்புகிறோமா?

நாலைந்து பேரை நகர்த்த நாம் பட்டபாடு.

நாளை என்ற சொல்லும் – உணவு

வேளை வந்து சொல்லும், கேளுங்கள்

வேறெந்த நாடுமில்லை – நம் போல்

பட்ட கண்ணில் பெற்றோல் ஊற்றியதில்லை.

 

நான் வாழ்கிறேன் – ஐந்தறிவோ

ஆறறிவோ, ஆற்றாமையால் அழும் நாட்டில்

நான் வாழ்கிறேன்.

 

நாம் வாழ்கிறோம் – ஐந்தறிவோ

ஆறறிவோ, தீனிக்கு திண்டாடும்

தசாப்தத்துக்குள் வாழ்கிறோம்.

 

வாழ்கிறோம் – உயிர் வாழ்கிறோம்

வீழும் நாட்டில் – வீழ்த்திய

விருந்தினர்களுடன் வாழ்கிறோம்.

வாக்குக் கேட்டு எங்களை விருந்துக்கு

அழைத்து வரிசையில் வாட்டிய

விருந்தினருடன் வாழ்கிறோம்.

 

ஆலும் வேலும் பல்லுக்குறுதி

ஆளும் வேடர்கள் ஆயுளோ உறுதி – அதனால்

நாளும் இங்கே விருந்து,

நாட்பட்ட சங்கை ஊதிக்கெடுத்தார்

நசிந்த லங்கையை அன்றவர் உதவிக் கெடுத்தார்.

 

உதவிகள் வைப்பிலிடும் உறுப்பினர்களை

ஊக்கப்படுத்தும் தரப்பினர் – ஊடறுத்த

ஊழல்கள் நிரப்பிய வீடுகளோ

கடல் கடந்து நாடுகளில் உறங்குகின்றன.

 

உள்ளூரில் விளக்கணைத்தே –

உறங்கும் வீடுகளை விலைக்கெடுத்து

எங்கள் உறக்கங்கள் கெடுத்த உத்தமர்கள்

உல்லாச சுற்றுலா போக, விலை போகுது நாடு.


-சி.சதுர்

Comments

Popular Posts