கண்டுகொண்டேன்...
கண்ணெதிரே கண்ணெதிரே
என் காலம் போகும் தூரம்
கண்மணியே பொன்மயிலே
உன் தோகை நோகும் பாரம்.
அண்மையிலே நீ வந்து நிற்க
உறைந்து போனது நேரம்
உண்மையைத் தான் பாடுகிறேன்
நீ, நான் வாங்கிவந்த வரம்.
காரிகையின் தூரிகைகள் தூவும்
வண்ணத் தூறலிலே தொலைந்து
போனேன்- நிறக்குவியலிலே
நீந்திக் குளிக்கச் சென்று வானவில்
வளைவில் வழுக்கிவிட்டேன்.
நிறங்கள் ஆயிரம் நீ தந்தாய்
கனவுக்குள் நீந்திட நீ வந்தாய்
கனவுக்குளத்தின் மீன்கள் பார்த்தே
தூண்டிலின்றி சிக்கின கண்கள்
துவண்டிடும் மீனாய் நான், கரையிலே.
கரைதீண்டி கடல்திரும்பும் அலையிலே
பிறைதீண்டும் முகம், அவள்முகம் தெரியுதே
சிறைவாசம் செய்யும் மனமலரும்
உன்சுவாசம் படவே மனம்மலரும்,
கைபேசித்திரை உன் எண் தேடும்
கையெழுத்தும் உன் பெயர் சரிபார்க்கும்
கண்ணாடியில் விம்பம் தன் துணை தேடும்
ஆகாய நிலவாய் உனைத்தொடரப்போய்
தீக்காயம் ஆனேன் உன் விழிச்சுடரால்.
போர்காயம் பட்ட உடலை பூத்தூவி
நிலம்விழுங்குவது போலே ஒரு பூவென்னை
விழுங்கியதால் மனமோ நடுவெளியிலே
நான் தொலைந்த இடம் தேடுதே.
வெயில் தரும் விழிகள் கண்டு
இதயம் மலரும். இதய மலரும்
அவ்விழிகள் போனபின் வெயிலைத்தேடும்.
துயில் தொலைத்தேன் உன் விழியில்,
நீ சென்ற பாதையில் என்
நிழல் தொலைத்தேன் - என்
விழியிலோ மழைமேகம்
விழித்திரையிலோ அலைமோதும்
நீர்க்காகம் போல நான் நீந்திக்
குதிக்க உன் நினைவுக்கடல்,
அலைகள் இல்லாமல்
அமைதியாய் எனக்கு வேண்டும்...
-சி.சதுர்
தூண்டிலின்றி சிக்கின கண்கள், துவண்டிடும் மீனாய் நான், கரையிலே, இவ்வரிக்குரிய விளக்கத்தை அறியத்தருவீர்களா?
ReplyDeleteஇங்கு கவியின் கண்கள், அந்தப் பெண்ணின் பார்வையில் நிலைகுத்தி நிற்பதை குறிப்பாக உணர்த்த தூண்டிலின்றி சிக்கிய மீன்கள் என்கிறார்.
ReplyDeleteஅவ்வாறு சிக்கி அவர் அடையும் துன்பம் கரையில் துடிக்கும் மீனிற்கு ஒப்பிடப்படுகிறது.
மிக்க நன்றி
Delete👍
Delete