கனா வரும் வேளை

கனா வரும் வேளை

கண்ணன் வருகிறான்

கண்கள் செய்த தவமென

கண்ணன் வருகிறான்

 

உண்ணாமல் உறங்காமல்

உயிர் நாடுங்காலை, வராதவன்

உறக்கத்தில் வந்து என்னை

உடனழைக்கிறான், கண்ணன் உடனழைக்கிறான்

 

பூவையர் கண்களிலே

கண்ணன் ஒளிகிறான்

பூக்கூடை சுமந்த பெண்கள் கையை

கண்ணன் கொய்கிறான், அவர் கூடை கவிழ்க்கிறான்

 

தூழியில் ஆடும் தோழிகளை

கண்ணன் விளிக்கிறான்

தோழிகளின் கண்களில் இருந்து

கண்ணன் மறைகிறான்- மாயக்கண்ணன் மறைகிறான்

 

பிரமை போல பின்னே வந்து

பின்னல் இழுக்கிறான்

பிரேமை கொள்ளும் பெண்களுக்கு

இன்னல் கொடுத்து இளிக்கிறான்  


கண்ணனை காணாது கன்னியர் தவிக்கையில் 

குழலெடுத்து கூப்பிய இதழில் பதித்து 

குழலார்களை கூடி நின்று கோலாட்டம் ஆடச்செய்கிறான்

கோலாட்டம் ஆடுகையில் குழலோசை நின்று போக,

கண்விழிக்கிறேன் இங்கு நான் கனவில்

வந்த கண்ணனை காணாமல் தவிக்கிறேன்.


வானம் விழிக்கும் நேரம், விஞ்ஞான உலகில்

கடிகாரச் சேவல் கூவும் நேரம்.

கூவாத சேவலை குறைசொல்லிவிட்டு.

கண்ணனின் நினைவுகளை கண்களில் படிக்கிறேன்.


கனவில் வந்த கண்ணன் உருவம் 

நினைவுகளுக்குள் ஒளிந்து நின்று 

கைகாட்டி சிரிக்கிறது, கோகுலத்தின் 

ஆட்காட்டி குரலெழுப்பி அழைக்கிறது.


கைதொடும் தூரத்தில் கண்ணன் இருக்கிறான்,

குழலொருகையில் கொண்டு அவன் 

குமைந்து கொண்டு நிற்கிறான்

அருகில் செல்ல அடியெடுத்து வைக்கிறேன்,


அட கோரமான இசையொன்று

அதன் கைகொண்டு கனவுக்கண்ணனிடம் 

இருந்தெனை கவர்கிறது, விழிமடல் திறக்க

கடிகார சேவல் என் கைகளில் பரிதாபமாக கூவுகிறது.


கனா வரும் வேளை

வந்த கண்ணன், கடைக்கண்ணால்

நனா உலகை எட்டிப்பார்த்து விட்டான் போல

நவீன கோபியரிடம் இருந்து தப்பிக்க

கோகுலக்கனவில் ஒளிந்து கொண்டான் போலும்.


 

-சி.சதுர்



Comments

Popular Posts