எழுதிக் களைத்தேன் எம்பெருமானே!

வரிசையில் நின்றே வேர்விடும் வாகனங்கள்,

தரிசான நிலத்திற்கு தரகர்கள் தம்பட்டம் ஏன்?

விரிசல் விழுந்த விழுதுகள், பரிசாய்க் கிடைத்த 

கரிசை நிலமுண்டு கையிலோ கடனுமுண்டு.


ஆழாக்கு அரிசியில் அரைவயிறு அந்நியம் ஆனது. 

வண்ணப்பூ வர்ணம்பூசும் வசந்தகாலம், 

வசந்த காலத்தை விழுங்கும் விழிகளில் விழுகின்ற கண்ணீர்க் குண்டு.


வண்டி வாங்க கடன் வாங்கி வீடிழந்த கதையாக,

பாடை கட்டப் பணம்கொடுத்துப் படுத்துக் கொண்டோம் பவிசாக.

சூழும் நிழல்கள் எம் மேலே,

பச்சைக்குதிரை தாண்டும் தனாதிகாரிகளை தாங்கிப் பிடித்தோம் எம் தலைகளிலே.


மொச்சை மென்று , பயறு மூச்சடைத்த 

மந்திகள், யானை ஏந்திய தாமரை மொட்டுக்குள் தண்ணீர் தேடி 

மாட்டிய சம்(ப)மந்திகள் நாங்கள்.


கச்சை கட்டிய காலத்தில்,

கோமணம் கட்டிப் பழகினோம்.

கோமணம் மிஞ்சிய கோலத்தில்,

கொண்டு கட்ட கவசம் இல்லை.

எம் கோரிக்கைகளால் பறக்கும் 

கொடிகளே! குடி-மானம் காப்பீரோ? 


விடாது பெய்கின்ற மழை- எம் நிலம் தொட கூசுவதேனோ?

விடாது விட்ட வேகாத வார்த்தைகளோ,

அடாது செய்த கையாகாத அடியார்களோ,

வானம் விற்ற அடியாருக்கு அருநீரும் வேண்டுமோ? - வானம் அழுகிறது


கொட்டுதோ உனக்கு இங்கே கவிவரி

தீவுக்குள் திட்டுத் திட்டாக பல தீவுகள்

தட்டுச்சோறு விட்டு விட்டுக் கிடைக்கும்

நாட்கள் நெருங்கும் நேரம்- உனக்கு மெட்டுக்கவியும் ஒரு கேடா?

ஓயாமல் ஒப்பாரி ஒலிக்கும் உன் வரிகளில்

தேயாத உண்மைகள் சலிக்கிறது தோழா!


ஊன்றுகோல் தொலைத்த செங்கோல், 

ஊருக்குள் நீளும் அனுமன்

தொலைத்த வால், இன்றோ அதை

எரிக்கவும் வழியில்லை இராவணா!

-சி.சதுர்






Comments

Popular Posts