கருவறைத்தீவில்...

கண்கள் மூடிய நிலையில்

கருவறைத்தீவு கதியாய்

ஐம்புலன் உணரும் திறனற்று

அன்னையுள் அடங்கிக்கிடக்கும்

 

அணைக்கும் கரங்களை உணர்ந்து

அன்னையின் அறிவுரை உணர்ந்து

நினைப்பால் வேண்டுதல் உணர்ந்து

நிச்சயமாக நீ தாலாட்ட தஞ்சமடைவேன்

 

இத்தீவின் சுவர்களெல்லாம்

நாளும் வளருமென்னை

தாங்கும் வேதனை ஒலிக்கும்

தீவில் உள்ள என் உருவம்

தீபோல் உன்னை எரிக்கும்

அது தெரிந்துமே உன் மனம் களிக்கும்

 

மகவாய் வருமுன் மாதம்தோறும்

மடியில் இறக்காமல் தூக்கிசுமந்தே,

உள்ளே திணறும் உயிரை

ஊட்டி வளர்ப்பாய் – உன்

உடலின் காயங்கள் என்னால்,

அதையுணர்ந்தும் உள்ளம் உவப்பாய்.

 

தீவே சிறையாய் நானிருக்க, - என்னால்

உன் உடலே உனக்கு சிறையாய் மாறியதே!

பூவாய் இருந்த உன்னுடலில்

பூதாகரமாய் நான் கனப்பதோ?

வாய்க்கால் வடியும் நீர்த்தடங்கள், வலியால்

விழிகள் எனை சபித்தனவோ?

 

மருத்துவ அறையின் மௌனமெல்லாம்

மகவின் ஒலிகேட்டு பறக்கையிலே,

மடியில் மழலைக் குரல்கேட்டு

மெல்ல விழிகள் திறந்து

செல்லமாய் ஒருமுறை பாராயோ? - உன்

மௌனம் எனக்கு விட்டுச்சென்ற தனிமைத்தீவும்

வேண்டாம், மீண்டும் கருவறைக்குள்ளே ஓரிடம் கொடு.

மறுமுறையாவது ஓருயிர்  

மூச்சு விட, பிண்டமாய் வருவேன்.



-சி.சதுர்

Comments

Popular Posts