இதுதான் சமபந்தி!
ஆரம் தழுவி அரவணைத்து, அமுதுவைத்து,
அன்புவைத்து அத்துடன் பண்பும் பைய வைத்து,
அகங்கள் பரிமாறும் அன்பு விருந்து.
நகம் பட்டாலும் குலம் நசிந்து போகும்,
நகர்ந்து நில்லடா! முகம் விளித்தாலும்
மலடாய்ப் போகும் மலரும்,
மறைந்து நில்லடா! - குரைக்கின்ற குரல்களே,
கூடி வாழும் குணம் மறந்த குடிகளே!
நசிவடைந்தோரை நாலாய் மடித்து
நாக்கில் போட்டு உமிழ்ந்த வெற்றிலையாய்,
நலிந்தவர் நெய்த பட்டை பெற்றும் அவர் பட்டா வையும்
மடித்து பகடையாய் உருட்டும் பட்டத்து அரசர்களா!
கீழோரும் மேலோரும், வேரோடும் ஊரோடும்
அங்கு எங்கனம் தேரோடும்?
பாரோடும் பட்ட கடன் யாரோடும் போவதில்லை.
ஊரோடும் வெட்டி யாரும் பேரோடும் மாண்டதில்லை.
மேகம் அசலைக் கொடுத்து
வட்டியைத்தான் வேண்டும் ஊரில்,
தாகம் தங்கிக் கொண்ட தாவர குரல்வளையில்
தண்ணீர் வார்க்க நாதியில்லை.
நாசாவுக்கும், கூசாவுக்கும், ஆசாவுக்கும்,
ஆடம்பர -சாவுக்கும் அங்கு அள்ளியிறைக்கும்
காசுக்கும் கணக்கில்லை.
நம்மவர்களும் நண்பர்களும்
நல்ல பிற உறவுகளும் நாடும்போதும் தேடும்போதும்
நைந்தே வாடும்போதும்
கஜானாவில் கதவில்லை.
காசோடு பேசி, காலத்தோடு வீசும்
காலத்தின் துகள்களின் நகல்களாய்,
கறுப்பாகவும், கலராகவும்; காசாகவும், கந்தையாகவும்,
வெறுப்பையும் எம் இருப்பில் விதைத்து, விட்டுசெல்லும் விவேகிகள்.
துவேசங்கள் வேசங்கள், தூண்டிவிட்டு
தூங்கிப் போகும் சமுதாய தூரத்து உறவுகள்.
அதை தூக்கிப் பிடித்து தூபம் பிடித்து
தணலில் சுகம் காணும் சாபங்கள்.
சமுதாயப் பந்தியில் அருமையான விருந்து,
சாப்பிட்டு இலையோடு சாய்ந்துவிட்டால் சாக்காட்டு விருந்து.
சால்வை போட்டு சாதம் கேட்டால் சமரசமில்லா உபசரிப்பும்,
வேர்வை விட்டு சோறு போட்டால்
ரசமில்லா ரொட்டித்துண்டும் சிரிக்கும்.
ஆனாலும் இதுதான் சமபந்தி...
Comments
Post a Comment