கங்குல் கண்களால்...


காயும் நிலவு வானிலே

கண்ணுக்குள் தூறும் நீர்மழை

தாயும்சேயும் பெண்ணிலே

கண்ணூறு படாதோ இம்மண்ணிலே

 

குளிரும் நிலவும் பந்தமோ

தளிர்க்கின்ற அல்லி அதன் சொந்தமோ

மிளிரும் மீன்கள் அள்ளி வானக்கடலில்

தூவிய தூயவர் யாரோ.

 

பகல் நிறைக்கும் மேகங்கள்- பதுங்கிப்

பதுங்கி ஊர்கின்ற படகைப்போல

மீன்கள் கூட்டத்தில் தூண்டிலின்றி

வலம் வரும் மேகக் கப்பல்கள்

 

சூழ்கின்ற பேரமைதி சுகம் கொண்டு சேர்க்கும்.

சூழ்நிலை புரிந்து அமைதிக்குள்

மனித மிருகங்கள் விழித்திருக்கும், மயான அமைதியில்.  

சூழ்ச்சி செய்யும் பேர்வழிகள் சூதானம்  

சூரன் சொக்கப்பனை எரித்துப் சோதியுள்

சுண்ணாம்பாக போய்விடுவீர்.

 

எண்ணம் போல வாழ்க்கை என்றார்- தாளின்

வண்ணம் போல் தான் வாழ்க்கை என்றே

வாழ்க்கை சொல்லியது.- வண்ணமயமான வாழ்வு

வேண்டுமென்றே வண்ணத்துப்பூச்சி இருளில் தவம் இருந்ததோ?

இன்னும் வேண்டும் என்றே கேட்க நேர்ந்தால்

இருளும் இடரும் இரட்டிப்பாகுமோ?

 

எது கிடைப்பினும் ஏங்கும் மனமே

இடர் வரும் போதினில் துஞ்சாதே இனிமேல்

சுடர்விடும் தீப்பொறி துரத்திடும் துயரும்

படர்ந்திருந்த இருளும் பஸ்பமாகிடும்- இனிதே

தொடரும் நம் பயணம், நடைபோடு துணிந்தே

இருளைத் துரத்தும் ஒளியாய்




-சி.சதுர்

Comments

Popular Posts