கடிவாளமற்ற காலக்குதிரை


சில்லென்று பெய்யும் மழைத்துளிகள்

தகரக்கூரையில் பறை முழங்க

அடித்த பிரசண்ட மாருதத்தை

எதிர்த்து துணிந்து நிற்கும் கோரைப்புற்கள்

 

பெய்யும் முகிலை சபிக்குமாப்போல்

எரித்துப் பார்க்கும் தவளைக் கூட்டம்

குளியல் போட்ட மகிழ்ச்சியில் மெய்சிலிர்க்கும்

விலங்குகள். வரட்டி போன்ற நிலத்தை

குழைந்த சாதமாய் மாற்றிய வானம்

 

கொடுக்கையில் வானத்திடம் கற்றுக்கொண்டு

கெடுக்கையில் ஆழிப்பேரலையிடம் கற்றுக்கொண்டு

எடுக்கையில் கடன் கொடுத்தவனிடம் கற்றுக்கொண்டு

மிடுக்கையும் இடுக்கையும் மொட்டைப்பாறை

குன்றிடம் கற்றுவிட்டோம்

 

வானம் வந்து வாய்ப்பளித்தது

மொட்டைப்பாறையிலும் முல்லை பூ பூக்க,

பாசியும் புல்லும் பிறந்ததுதான்

அந்தப்பாவிக் குன்று செய்த பாக்கியம் என்றாகி

பூசி மெழுகிய ஒரு அழகான பொய்யான பசுமை

வந்து எட்டிபார்க்கிறது மொட்டைப்பாறையில்,

மேகங்கள் வெளிநடப்பு செய்யும் வரை.

 

பாறைக்குள் என்ன ஈரம், இது

பாதைகள் மறைகின்ற காட்டின் ஓரம்

நாரைகள் போகும் தூரம், நான் கண்டதில்லை காணும்

யாரையும் நோகும் வார்த்தை விடுவதில் பயனுமில்லை காணும்

பாதைகள் மறைந்த பின்னும் பார்வை மலர்ந்திருக்க

பகலவன் பாதையை பிறைநிலா பின்பற்றுதல் காணும்.

 

மதியுண்டோ மூடனே உனக்கென்று

மதி வந்து கேட்பதில்லை, காட்டுவழி

கருணையற்றதென காடைகள் எச்சரிப்பதில்லை

விதிமுடிந்து நீ வரும்வரை ஒளி தருவேன் என்றே

விண்ணக வாயிலில் தூதன் விழித்திருக்கிறான்.

வாழும் நாட்கள் காலக்குதிரையின் பின்னால்

கடிவாளத்தை தொலைத்துவிட

 

வெள்ளிக்கயிறொன்று கண்ணிலிருந்து

புறப்பட்டு நெஞ்சம் வரை சென்று கட்டிப்போட்டது.

பஞ்சம் காணாத வெள்ளாறு

பாய்ந்து ஓடி வந்ததுபோல்




-சி.சதுர்

Comments

  1. தங்களுடைய தமிழ்ப்புலமை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.

    ReplyDelete

Post a Comment

Popular Posts