உலையிற் கொதிக்கும்...
காப்பியமும் கண்ணகியும்
கடந்து சென்ற பாதைகளின் ஓரங்களில்
இன்று காட்டுமிருகங்களின்
கூக்குரல்கள், பெண்ணே!
கொப்பெரும்தேவியும் காரைக்கால்
அம்மையாரும்
காப்பாற்றிய தர்மங்கள்
மூப்பெய்திய மூங்கில் மரமாய்
விரிசல்விட்டு விஷப்பூச்சிகளின்
வீடுகளாயின.
மக்கள் மாக்கள் ஆனபின் மனுவின்
மனிதமும் மன்றிலே புனிதமும் புத்தக
ஆலயங்களில் புழுவிட்டுப்போன
பக்கங்கள்.
காலம் பட்ட இடத்தில் காயம் பட்ட
காவியங்களின் கல்லறைக்காடு,
காற்று படாத பக்கங்கள் உறங்கும்
பள்ளிகளில், எங்கள் புஸ்பக விமானமும்
புனர்வாழ்வு பெறாத அகதிதான்,
எண்ணியெண்ணி விபரிக்க
வரிகளில்லை
விம்மிவிம்மி விவரிக்க
வலிகள் நினைவிலில்லை
காலம் வரைந்த ஓவியங்கள் - நினைவுப்
பாலம் அறுந்த தீவுகளான பின்
பாதைகள் இருண்டால் தான் என்ன?
போரும் புகழும், போட்டி நடுவில்
புழுத்துப் போன நிலையில்,
பருக்கையும் வெருங்கையும்
உழுத்துப் போன உலையில்,
உலகமயமாதலில் உள்ளூர்க்கலாசாரம்
விலைபோனால் நமக்கு என்ன?
Comments
Post a Comment