கூனிக்கொண்டன முதுகுகள்
தீப்பிடிக்கும் முகில்களை
தேடி வந்து அணைக்கும் சூரியன்.
மழைநீரை நூல்திரித்து, வானவில்லை நூற்றுவிட்டு,
நகரங்களின் விழிகளின் வாசலில்
விரிப்புகளாக்கிப் போகிறான்.
விரிப்புகளில் நிறங்களை இழந்து
கரைந்து போன வண்ணத்துப்பூச்சிகள்.
இரவுக் குளத்தில் இறங்கி ஈரமான நிலா,
வெயிலில் கூந்தல் அலசும் போது,
நிலத்தின் பச்சை வயல்களில்
முத்துக்கள் அறுவடையாயின.
நெருப்புக்கயிறுகள் இலைகளிடையே உரசியதில்
தீப்பற்றிய காட்டுவிருட்சங்கள்,
விழித்துக்கொண்டது வனம்.
தீப்பிழம்பை உமிழ்ந்து இரவின் நாக்கு சுட்டுப்போனது.
இருளின் நச்சரிப்புகள் உறக்கம் கொள்ள,
இமைகளை தானம் தந்தது கிழக்கின் கண்.
பித்தாகரசும், ஆக்கிமிடிசும், அலெக்சாண்டரும்
அடைக்கப்பட்ட அகச்சிறையின்
சாவியை உமிழும் தொடுவானம்.
அதை தொலைத்துவிடவே இமைகளை
இழுத்துப் போர்த்திக் கொண்ட
சாவித்துவாரங்கள்.
கதவு தட்டும் தென்றலை வரவேற்க
சாளரங்களை மூடிவிட்டு,
மின்விசிறிகள் காற்றைக் கிழித்தன.
கிழிந்த காற்றின் வரிகளை அள்ளி,
மீன்தொட்டியின் நட்சத்திரங்களுக்கு
நறுக்கிக் கொடுத்து,
தான் கடவுளானது தானியங்கி மோட்டார்.
காற்றும் காட்சியும் காலைப்பிடிக்க,
குனிந்து பார்க்க கூச்சப்பட்டு
கூனிக்கொண்டன முதுகுகள்.
Comments
Post a Comment