விடியல் எனது...

விடிகின்ற பொழுது விரிகின்ற மனது

விடிகாலை உனது விடிவெள்ளி எனது

வரிக்குதிரை சுமக்கும் வரிகளில் விழுந்து 

வடிகின்ற நிறக்கலவை பிடித்து 

சிரிக்கின்ற குளமொன்றில் சேமிக்க, சேமித்த

நிறங்களோ இருவகை;  

நிறமெல்லாம் குடித்தே நிறைந்த மனதுபோல் 

வெள்ளேந்தி  நீர்த்துரை சூழ,

விரலளவு மையெடுத்து -கன்னக்குழியில் 

கவிழ்த்ததுபோல் கண்மணியொன்றில் 

புதைந்து கிடக்கும் கயல் மீனொன்று 

கரைதேடி கருங்கடலில் வட்டமிட -அங்கு

திரையெழுந்து கனவுகளை மூடிவிட


கடைக்கண்ணாலே கடிதம் போடும்,

விடைத்தாள் மறந்த வினாக்களும் தொடரும்.

படைத்தாள் அன்னை பராசக்தி, பச்சை 

மலையில் பஞ்சவர்ணமேகமொன்றை.

பெய்த மழையில் பெண்ணான சிலையொன்றை,

கண்ணாரக் கண்டேன் 

பொன்னாரம் பூண்ட பௌர்ணமி ஒன்று

தென்றலை தூதுவிட்டால், பதில்மடல்

தொன்றுவதெப்படியோ!


என் மாடி தேடி வந்த தென்றல்

என் தோளைத் தொட்டு போகையிலே

உன் கூந்தல் தொட்டுப் போன ஸ்பரிசம்

மென் பூவை வாட்டும் வண்டுதான்.

மனமோ மீட்டாத நகை,

உன் இதயக்கடையில் உரைகல்லொடு

உரையாட...

சிதறிய நட்சத்திரங்கள் சேதாரம் 

கேட்டன.

மேகப் பொதியில் புதைந்தாய்

பிறைநிலாவே செய்கூலியும் 

வேண்டுவதோ?


காற்றோடு வாக்குவாதப்பட்ட விழிகள்

தோற்று, கன்னத்திடம் தூது சொல்ல

அணைகட்டும் விரல் உன்னுடையதாகி 

விடாதா?

ஊற்று நீர்பருகிய உன் தாமரையின் 

விடியல் 

எனதாகி விடாதா?

                                                                  -சி.சதுர்


Comments

Popular Posts