துயிலாத கண்கள்...

அத்தியாயம் தொடக்கம்,
அந்திப் பொழுதொன்று
ஆகாயம் பார்த்திருந்த 
அன்னக்கிளிகளை அள்ளிக்கொள்ளும் 
ஆரண்ய காண்டம்.

வானம் பூசிய மையில் - கண்
வைத்த நிலாப்பொட்டு.  
வைத்த கண் வாங்காமல்- க(கி)ளியாட்டம்
விரைக்க, விலகிக் கொண்டது 
வெட்கம் கொண்ட வெள்ளாவி மேகம்.

வென்று வந்த நா(கா)ட்டை 
மென்று பார்க்கும் வெள்ளிக்கண்களை 
தின்று விட்ட கங்குல்கழுகு போல்
கொன்று வந்தது கொலைகாரக் கொள்ளி.
நன்று, அது இரவு குளிர்காய்ந்த கொள்ளி

நிலம் விழுங்கிய தடங்களை 
எறும்புகள் தேடுமாப்போல் - குடிலின் 
கலம் விழுங்கிய கனவுகளை
விரல்கள் துலாவிக்கொள்ளும், 
நலம் விழுங்கிய நள்ளிரவில் 
கோட்டான்கள் கொடியேற்றுவதால்.

அத்தியாயம் அந்திமம்,
கடன் தேய்ந்து வட்டி பெருக்க,
நிலாச்சோறு தீர்ந்து பருக்கையும் 
கடைவாயில் கழுவப்பட்டது - அந்நாள்
இரவின் பற்கள் பட்டினித்துயிலுக்கு
பழகிக்கொண்டன.

மறுநாள் கறுப்பு ஏரியில் 
வெள்ளி ஓடம் முளைத்துக்கொள்ள,
நேற்று பட்டினிக்கு துயில் தொலைத்த
மீன்கள், 
ஓடக்காரன் வீசும் மேக-வலைக்கு 
துயில்  தொலைக்கின்றன... 
பாவம்
துயிலாத மீன்களின் விழிமடல்கள் 
ஓடக்காரன் கைகளில் வலையானது...


-சி.சதுர்








Comments

Popular Posts