இறைக்காத கிணறுகள்

நன் செய்யும் நிலங்களில் ஏனோ

நரைத்த பயிர்கள்,

புன் செய்யும் நிலங்களில்

புதைந்த புன்னகைப்பூக்கள்,

 

கண் தாவும் இடமெலாம்

கண்ணீர்க்குளங்கள்,

கையேந்தும் நிலமெலாம்

வியர்வைத் தடங்கள்.

 

அரைக்கம்பத்தில் அங்கே ஒரு வெள்ளைக்கொடி - 

ஆடை நாகரிகத்தின்

அந்தரத்தில் ஓர்நினைவுமுடிச்சு - அங்கே 

அரைஞாண்கயிறு அணைத்த இடங்களில்

நிறையாத அன்னக்குழிகள்.

 

நிலம்கீறி உயிர்புதைக்கும்

கடவுள்களின் உண்டியல்களின்

காணிக்கைகளில் கைவைக்கும்

அர்ச்சகர்கள்.

 

கச்சைகட்ட பழகிக்கொண்ட படைப்பாளிகள்,

இச்சைஎல்லாம் விலக்கிக்கொண்ட அந்த

இதயங்கள் நிலத்தை உலுக்கியேனும்

கஞ்சியூற்றும் அன்னக்கிணறுகள்,

இறைக்காமல் விட்ட கிணறுகள்...

இறைவன் ஏறிக்குதிக்கும் மொட்டைக்கிணறுகள்...

 

நிலக்கலவையில் மேழித்தூரிகை

நிரப்பிய வரப்புகளில், ஓவியங்கள் முளைத்த

நேரத்தில், மூச்சுவிட்ட நிலங்கள்...

இயந்திர நகங்களால் காயம்பட்டு

வம்சமில்லாத விதைகளுக்கு கருக்கொண்டு

மூச்சை நிறுத்திக்கொண்டன...



-சி.சதுர்

Comments

Popular Posts