வெந்து தணிந்தது காடு
மானாடும் மஞ்சள் மலையில் - இங்கு
மரமாடும் ஊஞ்சல் சிலையே
சுரம் போடும் ஊஞ்சல்க்கிளையே
சரம் போடும் காட்டுமுல்லையே
முறம் பட்ட வீட்டுப் புலி ,
முணகாத காட்டுப்புலியின் காயங்கள்
மூடிக்கொண்டே போர்வையாகிறேன். - கானகமே!
சிரம் உருளும் சகதி உலகில்
வரம் அருளும் சக்தியொன்று - என்
கரம் பற்றி நதியொன்றை கைத்தாங்கலாக
கைகளில் நிரப்பிச் சென்றாள்.
கைரேகைகளில் கிளைவிட்டு,
மனதில் அலையடித்து கண்ணணைகளும்
மதகுகளும் மடை திறக்க
மனதுள்ளே புதுவெள்ளம்...
மழை குடித்த மேகங்கள் - என்னிடம்
கொலை மிரட்டல் விடும் அந்த கானகக்கண்கள். - மனக்
கிடாவின் கொம்புகளில் முத்துக்கள்
கிடந்தே முகவரி தேடின,
முகில்களை காம்புகளில் மறைத்து - என்
பகல் பொழுதுகளும் பால்வீதிகளை கொட்டின.
வெயில்களை வாட்டி என் விரலில் ஒரு
கிரகண மோதிரம், தன் முதல் நிலவை தேடுதாம்...
உன் கிளைகளில்,
மின்மினிக்கூட்டத்தில் முதல் நிலவைக் கண்டுகொண்டேன்
மின்னி மின்னி அணையும் விளக்கின் நிழலில்
மறைந்துகொண்டேன். மின்வெட்டின் நடுவில் - என்
மனையின் வாசல் தொட்ட வெண்ணிலவே - உனக்கு
இணையில்லாத மீன்களை விண்ணில் கைது செய்ய
துணையில்லாத மேகம் செய்தேன்,
தூணுக்குள் தூங்கிய நரசிம்மர்களே அசையவேண்டாம் - என்
மான் தூங்கும் நேரமிது!
காடுகளே காதுகளை மூடிக்கொள்ளுங்கள்
கவிஞனுக்கு ஏடுகள் திறந்துகொண்டன...
இனி புல்லசையும் ஓசைகளை
தனியாக கேட்கப்போகிறேன், - அவளின்
கொலுசினது ஆராய்ச்சிமணிகள்
கோரிய நல்லிசையை தேட வேண்டும்... -ஆனால்
கூரிய பிணங்கள் முளைக்க குத்தி நின்றாள் - என்
காரீயம் பூசிய வனதேவதை, கைகளில் கறுப்பு இரத்தம்.
அவளைத்தேட வேண்டும் ...
கவலை தொலைத்த கால்தடங்களை தொண்ட வேண்டும்
அபலையின் நதிகளில் கலந்த கருமையை
களைய வேண்டும் - பொந்துகளில்
ஒளிந்திருக்கும் அக்கினிக் குஞ்சுகளை
அணைக்க வேண்டும். அனல் விட்டுச்சென்ற
தளிர்களை தடவி அவள் முகம் தேட வேண்டும்.
நிலம் எரிந்த நிமிடங்களில் வேர்கள் என்ன நினைத்திருக்கும்?
தாத்தனுக்கு கொள்ளிவைக்கும் போது
தீக்குச்சி என்ன நினைத்திருக்கும்?
தேர்முனையில் போர்முனையை எதிர்கொண்ட
தனஞ்சயனாக தன்னை உணர்ந்திருக்குமோ? - அதை
பார்த்தசாரதியுமா பார்த்துக்கொண்டிருந்தான்? - மரங்கள்
வேர்த்தால் வீசும் காட்டின் மூச்சே தணல் மூள
தன்னைக்கொடுத்தது... - வன
தேவதையை சுற்றிவளைத்து வத்திக்குச்சிகள்
தற்கொலைத்தாக்குதல் நடத்தி தணிந்திருந்தன...
Comments
Post a Comment