கறையான் பக்கங்கள்

 வெள்ளைத்தாள்களில் படபடக்கும்

பிள்ளைத்தனமாக கிறுக்கல்கள். 

எல்லைவேலிகளில் பிளந்து போன காற்றைப்போல 

எல்லா திசையிலும் விரியும் வரிகள்.


மெல்ல இசையும் மனக்குதிரையின்

வலிய இசைய மறுக்கும் கண்களை 

விழி இமைகளால் தைத்துக் கொண்டனர்.

எளிய வலி வேறு உண்டோ 


கள்ளத்தனம் கல்லாத வயதில் கைகூடும் 

கறையில்லா கேண்மை, காசு பணம் 

குவிகின்ற வயதில் கரைந்தும் விடுமோ?

குறுகும் வாழ்வை செலவழித்து,

வெள்ளிக்காசுகளை வாங்கிவிட்டோமா?


வாழ்வை செலவழித்து வாழ்கிறோம் – அது சரி

வார்த்தைகள் விழுங்கி வயிறு நிறைக்கிறோம் – அதுவும் சரி

வண்டியை புரட்டிவிட்டு அச்சாணிகளை ஆராய்ந்துகொண்டிருக்கிறோம்

கைதொடும் தூரத்தில் வாழப்படாத பயணங்கள் - காலத்தோடு

கண்தொடாத தூரம் பயணிக்கின்றன.

பாதிவழியிலேயே அச்சறுந்து, பாடையில் ஏறிக்கொள்கிறோம்


சாண்களை எண்ணி எண்ணி முழங்களை

முழுக்கைச்சட்டைகளில் மூடிக்கொண்டோம் 

பணமணல்களை பறித்துப் பறித்து - நம் 

பாதைகளை பள்ளமாக்கிகொண்டோம் 


பட்டங்களை வாங்கிவிட்டு பதவிகளுக்கு பட்டம் விடுகிறோம்

புறாக்களின் கால்களில் போர்களை கட்டிவிடுகிறோம்

திட்டங்களை விற்றுவிட்டு தேற்றங்களை வாங்கிக்கொள்கிறோம்

கட்டிவிட்ட போர்களை கட்டிக்கொண்டு அழுகிறோம்


கால்களை தடவித்தடவி கண்ணிவெடிகளில் 

கன்று வைக்கிறோம் – கடன்பட்ட கால்களை

கண்ணிவெடிகளில் கட்டிப்போட்டுவிட்டு 

கண்ணீர்களை கடன்வாங்கி கைகுலுக்கிக் கொள்கிறோம்.


நோட்டுகளுக்குள் நொண்டியடிக்கும் நாடுகளின்

வீட்டுக்குள் நொண்டிக்குதிரைகளுக்கு பட்டம் 

கட்டிவிட்டு, கழுதைகளாய் வாழும் பாக்கியவான்களின்

பெட்டிகளில் நோட்டுக்கள் முளைத்தன.


வெள்ளைத்தாள்களாய் விழிக்கிறோம் 

கசக்கிய காகிதமாய் கண்மூடிக்கொள்கிறோம்

காலத்தின் எழுத்தாணி குத்திய இடங்களில்

கறைபட்டு சிவந்த தாள்கள் 


மறதிக்கறையான்கள் தொடாத பக்கங்களோடு

மண்கறையான்கள் தொடும் பக்கங்களில் 

தலைசாய்க்கும் தாள்கள்,

தணல் மேடுகளில் சில தாள்கள்...


மணல் மேடோ தணல் மேடோ

நாளை சாயும் தாள்கள்,

வேளை வந்தால் வெந்து போக 

வகை வகையான பக்கங்களை

வாசித்துக் கொள்ளும் காற்றும் காட்டுமணலும்...  


-சி.சதுர்



Comments

Popular Posts