ஈரமற்றவள்

பல்லைக் கடித்துக்கொண்டு பகலவனை

பிரசவித்த தொடுவானம்.

சொல்லைக் கடித்துக்கொண்டு சுலவம்

விசாரிக்கும் வெள்ளைமேகம்.

சுடுசொல் பேசி மேகம் எரிக்கும்

சூரியக் கதிர்கள்.

கடுசொல் பட்டும் கனமழைக்கு

கருக்கொள்ளும் மேகப்பைகள்.

 

கருக்கொண்ட பைகளின் மறைவில்

முதல்க் குழந்தையாக முழுநிலாவே! – உன்

பிறைநிலா காணும் கண்ணினிக்கும்,

குறைநிலா இது என்று குறுகுறுக்கும் – என்

தரைநிலா போல் வருமா தலை கனக்கும், - அந்த

நரைநிலா இது கேட்டு நகம் கடிக்கும்,

மறு கொண்ட வெண்ணிலவே மேக

மறைவினில் தோன்றிய பெண்ணிலவே என்ன சோகம்?

 

விடியல்வரை விழித்து – உன்னை

வழியனுப்புவார் யாரோ? – இரவின்

பிடியில் உன் விழிகள் நீர்பனித்தால்

விரல்கள் தருவார் யாரோ? – கறவை

குடிலில் ஓர் சூரியன் உதிக்க

விண்மீன்களால் திசைகாட்டிய நிலவேயுன் இரவை

பனிக்காடு வேட்டையாடும்போது – நீயோ மேற்கே

தனிக்காட்டுக்குள் தனியாய்க் குதிக்கிறாய்.

 

வில்லை வளைத்து உன்னில் நாணேற்ற மாட்டேன்

அரைமதியே என் சொல்லை மீறி நான் ஏய்க்க மாட்டேன்

கல்லைக் கொண்டு விண்கனிகள் தீண்டமாட்டேன் – உன்

நெல்லைக்கொண்டு நிலாச்சோறு சமைத்து இன்றும்கூட – உனக்கு

ஊட்டாமல் ஏய்க்கும் தாய்களை அண்டமாட்டேன்,

இத்துனை தாய்களும் ஊட்டாத சோற்றுக்கு

ஊரான்பிள்ளையாய் தினம் உச்சுக்கொட்டுகிறாய்.

ஊருக்கு உன்னை படைத்துவிட்டு நாலேழு திங்களும்

உண்ணாவிரதம் இருக்கிறாய்.

 

எத்துனை தனிமையிலும் ஓர் இனிமையாகிறாய்

எத் துணை பிரிந்த போதும் தோழனாகிறாய்

எள்ளிடும் இரவின் துளைகளில் உன் மின்மினித்தோழர்கள்

அள்ளிவிடும் அழகை இரவின் இலையில் பரிமாற

எவ்விடம் இவ்விலையை சுவைப்பது

எவ்விடமும் இவ்விலை சுவைக்கிறதே!

இவ்விடம் வாராயோ ஆம்ஸ்ரோங்குகள் மிதித்த

அவ்விடம் நானும் மருந்து தடவ...

 

காற்றுப் படாத உன் முகத்தில் ஏன் காயம்பட்டது?

கவண்கல் பட்ட கனிமரமாய் விண்கல் தொட்ட

உன் கன்னக்குழிகள், - குழியும் குன்றும் 

பிணைந்த உன் தேகத்தில் எங்காவது ஈரம் உண்டோ?,

இத்துனை இரந்தும் இறங்கிவர மறுக்கிறாய்.

ஈரமற்றவளாகவே இருந்துவிடு, மனிதர்கள் பொல்லாதவர்கள்...


-சி.சதுர்



Comments

Popular Posts