கருக்குழிகள்

மனை பிரிந்து மண்பிரிந்து 

மனம் பிரிந்து உடல்பிரிந்து செல்கிறோம் 

மண்ணிழந்து பொன்னிழந்து

கண்ணிழந்து கைகாலிழந்து

கண்ணீர்த் தடத்திலே கைலாயம் செல்கிறோம் 


ஊர் ஊர்ந்த தடத்தில் மலர்ந்த

உதிரப்பூக்கள், 

தருக்களின் வேர்பிடுங்க

நரிகள் நாட்படையோடு நெருங்கின. 

சாரைப்பாம்பு சட்டை உரித்தது போல

கூரைகள் துகிலுரியப்பட்டன .


நிலத்தின் கீழ் கருவறை

அமைத்து, நிலமகளின் கருவாகி,

அமைதி நிலைக்க கருவறைச்

சுவர்களை வேண்டிக்கொண்டோம்.

கருவறைக்கு காதுகள் இல்லை போலும்.


மூச்சுத் திணற முப்பது

உயிர்கள் பதுங்கிய கருக்குழியின்

கதவுகளை மூடிக்கொண்டு 

முகத்துக்கு முகம் முலுசி முலுசி,

கதவுகள் தட்டப்படாமல் இருக்க

தவம் இருந்தோம்.


ஓர் நாள்...

தட்டப்பட்டது கதவு

முடமானது தாழ்ப்பாள்

முண்டமானது பூட்டு

கிழிக்கப்பட்டது நிலமகளின் வயிறு


கருவறையை சூழ்ந்து கொண்ட 

எங்கள் நிலவறைகள். 

ஒருதடவை உதைந்தார்கள்

கருவறையை,

மறுதடவை உடைக்கப்பட்டுவிட்டது.

அன்று வாழ்வில் இரண்டாவது முறை 

பிரசவிக்கப்பட்டோம். 

இம்முறை மரணத்தின் வாரிசுகளாய்...


வானம் பார்த்து

வெறுமையாய்க் கிடந்தது 

கருவறை,

தோட்டாக்களால் நடந்து முடிந்திருந்த

சத்திரசிகிச்சை...

இன்னும் எத்தனை போர்களில்

எத்தனை கருக்குழிகளோ?



-சி.சதுர்

Comments

Popular Posts