கதை-க(ள்)ளும் பேசிடலாமா?

சோமபானம் சுகம்கண்டு

சொக்கி தினம் மதுவுண்டு

எமன் பாணம் தேகம்கொண்டு

விக்கி உயிர் போவதுண்டு

 

திக்கித் திக்கி குளறும் குரலில்

விக்கி விக்கி உளரும் நாவில்

சிக்கிச் சிக்கி உருளும் திவலைகள்

சீரழியும் கிணற்றுத்தவளைகள்

 

சோமப்பசி உடலைப்பற்ற, பற்றிக்கொண்டது

சோளக்காட்டுக்குள் ஒரு சொக்கப்பனை

சாமப்பொழுது சுடலைக்காடான சோளக்காடு

சேமிப்பை சுட்டுத் தின்றது

சோமபானத்தை தொட்டுத்தொட்டு...

 

சோலைப்பூக்களும், சொக்கட்டான் உருட்டும்

தண்டட்டிக் கிழவிகளும் மறைபொருளால்

முறமெடுத்த போதிலும் இந்த சோமப்புலி

பற்றிய இரைப்பை விட்டதில்லை

மஞ்சள் நீர்ப்பைகளிலோ கல்லெறிந்து விளையாடும்- கள்.

 

காயம் கரைகின்ற போதும்

தேயம் தள்ளாடும்போதும்

கோப்பைகள் தள்ளாடல் தகுமா

தானாடல் தெளிந்த பின்னே

தலையாடல் பொறுக்குதில்லை பராசக்தி!

 

தைலம் வாங்கப்போய் மீண்டும்

தலையிடி வாங்கி வந்தார்

காசியில் மூழ்கப்போய்

கடைச்சுருட்டில் கருகிப்போனார்

கதையெல்லாம் கேட்டதுண்டோ காமாட்சி!

 

தேனும் கள்ளுமாய் உள்நாவைத்தடவி

தேளின் கொடுக்காக குரல்வளை நெருக்கி

ஊழி நெருப்பாக உள்வயிறு கருக்கி

யாழி நகத்தால் மூளையில் கோலம் கீறி

தோழி பார், இங்கு பார்களில் ஊரின் தேர்கள் தள்ளாடுவதை

 

ஒய்யாரமாய் உயரமாய்

ஒற்றைப்பனைக்கு சக்கரம் கட்டினாப்போல்

ஓடி வரும் மாந்தரே ஊர்த்தேர்களே! நம்

தேர்கள் ஆடி வருவழியில் சிதறின,

தேங்காய்களுக்குப் பதில் தென்னங்கள்ளு முட்டிகள்....

இரசாயனவியல் ருசித்துத் துப்பிய புட்டிகள்...

-சி.சதுர்


Comments

Popular Posts