தெருவில் நிற்கும் தேசம்...

விழிமடல்களுக்குள்ளே கானல் அலைகள்

விழிநீர்க்குமிழிகளில் எங்கள் துயரக் கடல்கள்

கண்களுக்கு அணைகட்டும் கட்டை விரல்களின்

புண்களுக்கு கண்கட்டும் நீலக்கறைகள்.

 

சட்டப்படி தீர்மானம் எடுப்போம் – என்ற

எட்டப்பர்கள் வருமானம் எடுக்க

சட்டத்தின் படிகளில் எங்கள் ரத்தச் சகதி

குட்டப்பட்டோம் நாம் கடன் சூழ்ந்த நாட்டின் அகதிகள்

 

கடல் சூழும் நிலமெங்கள் நிலமென்று

கடலின் ஆழத்தில் மண்சுரண்டி – எங்கள்

கரைகளிலே மணற்கோட்டை கட்டிவைத்தோம்

கடன் அலைகள் கால் அரிக்க கைகட்டி நின்றோம்

 

வேசங்கள் துவேசங்களால் நிலத்தை போர்த்திவிட்டார்

வம்சங்கள் வயிறு காய வயல்களை பட்டினி வைத்தார்

வெண்ணிலவு உதிக்கும் நேரம் எங்கள் வீடுகளில் – மின்சார

விளக்குகள் அஸ்தமனம் ஆயின

 

இருளின் தனிமையில் தேசம்

தண்டோரா போட்டது

விரலின் மைகள் காயுமுன்னே – எங்கள்

விடியல்களை சால்வைக்காகங்கள் கவ்விக்கொண்டன.

 

ஒடியல் கூழுக்கு நாக்குகள் ஒட்டிக்கொண்டன

ஒற்றை அரியாசனம் நாட்டை வெட்டித் தின்றது

உலைகளில் கொதிக்கும் குமிழிகள் போல – எங்கள்

தலைகளும் கொதித்தெழ அரியாசனங்கள் நாடுகடத்தப்பட்டன

 

விலைக்கு விற்றால் வாங்கும் பொருளா - எம் நாடு

மழையை விற்று கிணறு வாங்கியது போல – எண்ணெய்க்

கிணறுகளை விற்று மொட்டைக்கிணறுகள் கட்டிக்கொண்டோம்

திணறுகின்ற வரிசையில் பெற்றோல் கேட்கும் பிணங்களாயினோம் 

 

சமையல் அறையில் சூடான அரசியல்

அவியலும் தட்டில் வந்துவிழ சுட்டுக்கொண்டதென் நாக்கு

துவையல் உண்டோ எனக்கேட்க துடைப்பம் தீப்பற்றிக்கொண்டது

வாயுபகவான்கள் வாசம் செய்யாமல் விட்ட எங்கள் சமையலறைகள்

 

வாயு சிலிண்டர்கள் சீறிக்கொண்டதால் – பல

ஆயுள் மனிதர்கள் சமையலறை கல்லறைகளாயின

மேயும் மாட்டை விரட்டிய நாயால்

மேய்ப்பவன் நாட்டை சுருட்டிக்கொண்டான்

 

தெருவிளக்குகள் கதையளக்கும் எம் கதை கேட்டு

தருக்கள் விதையளக்கும் – கனிகொடுக்கும்

கனிகளை உறிஞ்சிக்கொண்டு – எமக்கு

விதையளக்கும் அட்டைகள்

 

சூரியனை சுற்றிக்கொண்டு சுடுகிறது என்றாலோ

விரியனை சுற்றிக்கொண்டு விஷம் சூழ்கிறது என்றாலோ

வேடிக்கை மனிதர்கள் வீண்வம்பு ஏனென்பர் – இது

வாடிக்கையாய்ப் போனதனால் இன்று கடன்-அம்பு உதிரத்தால் சிவக்கிறது.

 

கால்கள் ஓயும் வரை அவர்கள் காதுகள் கேட்கும் வரை – எங்கள்

தோள்கள் ஓயவில்லை கோஷங்கள் குடை சாயவில்லை

வெண்குடைமேல் அண்டங்காக்கைகள் நாற்காலியை வட்டமிட

வெண்மேகம் துளைக்கும் நட்சத்திரம் போல் கற்களால் வீசிக்கலைத்தோம்

 

ஓய்ந்ததுவா வரிசை உழுதனவா நிலங்கள்

அழுதனவா மேகங்கள் எழுதியனவா பள்ளிக்கைகள்

மாய்ந்ததுவா கையூட்டு மறைந்ததுவா கடன்சூரியன்

ஓயவில்லை தோழர்கள் உதயம் இன்னும் முடியவில்லை

 

தேசாந்தரம் போய் வரலாம் தொல்லை

தேசத்தை தேடி வரலாம், இல்லை வேண்டாம்

என்றுவிட்டோம் நம் நாட்டின் எல்லைகள் மூடிவிட்டோம்

மென்றுவிட்டோம் விதியை ஆனால் உமிழவேண்டும் கடன் நிதியை

 

சட்டசபைகளின் தூண்கள் அலுத்துக்க்கொள்ளும் – அதே

சட்டைகள் அமர்ந்தால் நாற்காலிகள் புழுக்கம் கொள்ளும்

கட்டிகளில் மூட்டைப்பூச்சிகளை ஓட்டுப்போட்டு ஏற்றிவைக்கும்

கடமைக்குப் பூட்டுப்போட்டு விடு, கட்டில்களில் நீயமர்ந்து மிச்ச கட்டிடத்தை காத்துக்கொள்

 

விட்டில்களிடம் பேச்சுவார்த்தை செய்யும்

விளக்குகளை அணைத்து விடுவோம்

தொட்டில்களை ஆட்டிக்கொண்டு தாலாட்டுப் பாடும் தாயகமே

செங்கோலாட்டம் காணத் தெருவில் கூடி தேசம் இழந்த தேசமே!

 

தெருவில் நிற்கும் தேசமென்பார்

கருவில் நிற்கும் வருங்கால தேசங்களுக்காக – நாம்

வெந்தணலில் நிற்கிறோம் – பூசல்கள்

வேகும் தணலில் புதைந்திடும் ஊழல் ஈசல்கள்

 

நம் கண்கள் பூக்கள் மலர்ந்தாலும் – நம்கதைகள்

விதைகளாய் உருமாறும் நம் சிதைமேல் தருக்களின்  

நிழலாடும் அதன் கனிச்சுளைகளை சுவைத்திடும்

எதிர்கால தேசங்களே கேளுங்கள், நாங்கள் பெற்றோல் வரிசையில் முளைத்த தருக்கள்

 

எண்ணங்கள் தான் இனி மிச்சம் – நம்

திண்ணமே மனதின் உச்சம்

வண்ணமேகங்கள் பொழியும் மழையில் கடன் சூரியன்

கரைந்து போவதைக் காண தெருவில் நிற்கும் தேசம்...

 



-சி.சதுர்

04/08/2022

Comments

Popular Posts