தீக்குள் விரலை வைத்தால்...

 விடியல் வானம் அதை விட்டில் காண்பதில்லை – எங்கள்

மடியில் தூங்கும் தொட்டில்களில் ஓலம் ஓயவில்லை

ஏரி மீன்களுக்கு எல்லைகட்டித் தூண்டில் போட்டார் – அதை

மீறி குடிபெயர எம் பிணங்களுக்கே தடையும் போட்டார்

 

ஒற்றைப்பனைகள் ஊர்காக்கப் போனதனால் – எம்

பனங்காடுகளில் வெடிமருந்தில் பம்பரம் கட்டி விளையாடும் நரிகள்

பிணக்காடுகளாய் பட்டம் கட்டி விட்டார் – எம் நிலத்தின்

கள்ளிக்காடுகளில் ரத்தம் சொட்ட வாய்க்கால் கட்டி விட்டார்

 

போரும்-புகழும் எம் புண்ணுள் புகலிடம் தேடும் ஈசல்களும் – எமக்குப்

புதிதில்லை, கண்ணுள் கள்ளிப்பால் சுரந்ததுபோல் ரணமிங்கு – எம்

விதிகளை மண்ணுள் சாத்திக் கொல்லி வைத்திட கொலுவீற்றிருக்கும் – அந்த

சதிவாதிகளும் துவே(தே)சத்தந்தைகளும் புதினம் நமக்கு

 

கடல் வந்து கரைகட்டி கட்டிப்போட்ட நாட்டுள்

உடல் வெந்தெம், கனவுகளை வெட்டிப்போட்ட நோட்டுக்கள்

மடல் தந்த வெள்ளைப்புறா கழுத்தில் முத்தமிட்ட வாள்களால்

கடல் தாண்டி தஞ்சம் தேடும் நாங்கள் சர்வதேசப்பறவைகள்...

 

தேசமில்லா தேக(ம்)த் தோ(ஓ)டும், தேசம் தொலைத்த தேசாந்திரிகள்

வேசம் கட்டி தேசம் ஆளும், துவேசம் விளையும் தேகத்தினர்

நேசம் மறந்த நெஞ்சங்களால் எம் நெஞ்சங்களைத் துரத்தும்

பாசம் மறவாத துப்பாக்கியின் தோட்டாக்கள்...

 

பணமணல்கள் பறித்துப் பறித்து எம் பாதைகள்

பள்ளத்தாக்குகளாய் கர்ப்பம் தரித்தன – அங்கே

பிணமூட்டைகளை விதைத்து விதைத்து கண்ணீர்த்துளிகளை

பிரசவித்தார்கள், இப்பொழுது எம் பள்ளத்தாக்குகளில் பாயும் உவர் நதிகள்

 

கள்ளிக்காட்டு இதிகாசங்களும் கருவாச்சி காவியமும் – எம் நிலத்தில்

முள்ளிக்காட்டின் வாய்க்காலில் நொச்சி முள்ளாக உருண்டு

கொண்டிருக்க, ஏன் இந்தக் காயம்? யார் பூசிய சாயம்?

கொன்று, கொன்று ரத்தச்சகதிகளில் செஞ்சால்வைகள் ஊறியதேன்?

 

தேனும் கள்ளும், தென்னை நுங்கும் – கனா

காணும் கண்கள் கனவுகளை நேசிக்கத் தொடங்கின

பாழும் கிணறும், தூங்கும் தென்னை முண்டமும் வரும் கனவுகளில்

பலமுறை பாழும் கிணறுகளில் தலைகீழாக தண்ணீர் குடிக்கப் பாய்ந்தோம்

 

கண்துடைத்து விழித்துப் பார்க்கையில் – நாங்கள்

மண்துடைத்து, விரட்டப்பட்ட அகதிகள் – என்ற

உண்மை எம் கண்துடைக்க, விழிகளை தூசி ஒற்றிக்கொண்டது.

பெண்மையின் இலட்சணங்கள் என்ற பனித்துளி எம் கண்ணிமைகளில் பற்றிக்கொண்டது...

 

தீயில் தலையை விட்டு, விட்டில் உயிர் ஆவியாகும் – அதுபோல்

பாயில் தலைசாய்த்து சட்டென உயிர் ஆவியாகாதோ?

பாயும் தீயாக சூழும் இந்த விதேசத்தில் – எம் நாட்டின்

தீயின் வாய்கள் சுற்றி கொண்டாலும் சுகமென படுகிறது.

 

போர் அகதிகள் இவர்கள், ஊர் பேர் விற்று உலகம் சுற்றும்

சூழ்நிலைக் கைதிகள், மார் மேலே மலைகளை சுமந்து

சூழும் போர்மேகம் சுடும் “செல்”களுக்குத் தப்பி

சுற்றும் உலகின் சுடும் சொல்களில் சிக்கிக் கொண்டவர் – நாம்...

 

பாண்டவர் ஆண்ட பாரதம் சென்றோம் – இராம

ஆண்டவர் ஆண்ட அயோத்தி சென்றோம் – போரில்

மீண்டவர் உண்டேல் கைதூக்குங்கள் என்றார் – தூக்குகள்

தஞ்சம் தந்த உடல்களில் துவளும் நாக்குகள் போல நீண்டன எம் கைகள்

 

மறுபிறவி உண்டோ என்ற கேள்வி –

இப்பிறவியை கடித்துக் கொல்கிறது – இறைவா!

மறுபிறவி உண்டெனில் போர்கள் புகலிடம்

கோராத உலகில் எம்மை விட்டுவிடு!

 

நாட்டின் சோலையிலும் பல பூக்கள்

காட்டின் சோலையிலும் பல பூக்கள் – நம்

வீட்டில் மட்டும் ஏன் பூக்கள் பிரிவினை கொள்கின்றன – பின்

வேலிகளில் மாட்டிக்கொண்டு பூக்காம்புகள் புண்சுமக்கின்றன.

 

வில்லைகளை கழுத்தில் கட்டிக்கொண்டு

எல்லைகளில் தலை-எழுத்தை கட்டி விட்டு

விடலைகள் கையில் வெடிகுண்டு கொடுத்ததால்

விரல்கள் கறுத்துப் போன தலைமுறை நாங்கள்

 

கனவுகள் கலையும் மேகமென்பார் – போர்க்

களங்கள் களைந்திட்டால் போதும் – தீக்குள்

விரலை வைத்தோம், எதிர்கால

விட்டில்கள் பொசுங்காமல் காக்க.

தொட்டில்களை தூங்கவிட்டு போர்த்தீயின் ஒளியை

அணைத்து விடுங்கள்...

 

கண்டம் தாண்டி கடல் தாண்டி எரியும் காட்டுத்தீயோ?

முண்டங்களை விறகாக்கி மூண்ட போர்த்தீயே!

எத்தனை எத்தனை நாடுகளில் இன்னும் அதன்

அக்கினிக்குஞ்சுகள் எத்தனை எத்தனையோ?

 

அக்கினிக்குஞ்சுகளை அணைத்து காடு

வெந்து தணியாமல் காக்க

தீக்குள் விரலை வைத்தோம்

வெந்து தணிந்தன எம் விரல்கள்...
18/08/2022
-சி.சதுர்

Comments

Popular Posts