கப்பலுக்கு ஆயிரம் நங்கூரங்கள்...
கூட்டத்தில் நானும் ஒருவன்.
காவடி தோளில் ஏந்தி, ஆடலின் அடிகளை
அடிபிரளாமல் பதமாக எடுத்து வைக்க, அந்த
திருநடன ஊர்வலத்தில் தெருவை மறந்து
சன்னதம் கொண்டார் சிலர்.
பக்தரின் பதமான நடனத்துக்கு
இதமான சந்தத்துடன் மரபு மாறாமல்
உப்புத்தட்டிய குரலில் பாட்டுப்பாடினர்
ஊரின் பாட்டன்கள் சிலர்.
ஆங்காங்கே ஒற்றைக்கைகள்
கருப்புக்கொடிகள் ஏற்றிக்கொண்டு நின்றன,
தொலைபேசிகளின் இன்னொரு பரிணாமம்.
கேமராக்கள்; ஊர் சடங்கை சுட்டுக்கொண்டிருந்தன.
கரைகளின் நடுவே கறுப்பு நதியாய்
ஜனக்கரைகளின் மத்தியில் தார் வீதி.
கரைகளில் விளைந்த வேட்டிப்பயிர்களுக்கு
நடு நடுவே முளைத்த கால்சாராய்க் காளான்கள்.
சந்தனமும் குங்குமமும் வெந்தணலின் வெண்பொடியும்
சந்தித்த நெற்றிகளும்
கடல் காற்றை சுவைத்த உதடுகளும்,
ஸ்பரிசித்த கன்னங்களும் சாயங்களை பூசிக்கொண்டு
வெள்ளையடித்து விட்ட "மினி" வீடுகளாக வலம்வந்தன.
பதின்வயது முகங்களில் ஒட்டாமல்,
செதுக்கிக் கொண்ட தாடிகள்.
பூச்சிநாசினி அடித்த புற்களைப் போல நிறம்வாடி
பாடாய்ப்படும் தலைமுடிகள்.
தன் முகம் தன் இஷ்டம்
அறிந்த உண்மை தான்.
தன் முகம் படும் கஷ்டம்
தெரிந்து கொண்டால் என்ன நஷ்டம்
பிறந்த பின்னே இந்த மண்தந்த நிறமே நிரந்தரம்,
இறந்த பின்னே அந்த மண்கொள்ளும் உடலை,
இடைநடுவில் மண்வாசம் மாறாமல் மலர்ந்து, வாடி மரித்து விடாமல்,
விஷத்தை விரவிப்பூசி விரைவில் போகவோ எண்ணம்?
பணத்தைப் பொடியாக்கி
காசைக் கலராக்கி
சில்லறையை சிகையில் உருக்கி
கல்லறை வரை தொடரும் அழியாத கோலங்கள்
கலாசாரம் கண்விழிக்கும் போதே மைவைத்துவிட்ட
மனித மனம். மாறும், கள்போல் ஊறும் க(ள்)லாசார
மாற்றத்தோடு மாற்றம் பெற்றது அழகின் இலக்கணம்.
வெண்ணிலவை ஆராதித்த மேகம் உதயோனையும் ஆராதிக்கும்
கண்ணை ஆசுவாசம் செய்த வெண்ணிலவின் அழகு,
கண் கூசும் சூரியனின் அழகு, இரண்டும் அழகுதான்
ஆனால் கண்ணைக்கூசும் அழகை வரித்துக்கொண்டு இன்றைய
ஆகாயசூரியர்கள் கோட்டை விட்டு அஸ்வமேத யாகம் புறப்படுகின்றன
அழகியலும் அரசியலும் அர்த்தப்பாட்டை
அரசியல்வாதியின் கரம்போல் அரையங்குலம் நீட்ட
சமூகவியலும் சமூகமும் மட்டுமே சமூகத்தில் முன்னேறாத
முன்னுதாரணங்களாயின.
வேறெந்த துறையிலும் கற்றவர்களின் கரங்களே துறைதாங்கும்,
சமூகத் துறைமுகங்களில் கற்றவரோ, கல்லாதவரோ பயணிகளே
கப்பலின் மாலுமிகளும் ஆகிறார்கள்,
கப்பலுக்கு நங்கூரமாகவும் ஆகிறார்கள்,
இந்தக் கப்பலுக்கு ஆயிரம் நங்கூரங்கள்...
கரைவேட்டிகள் கால்சாராய்கள் ஆகலாம்,
கருங்கூந்தல்கள் கலர் கலர் கட்சிக்கொடிகள் ஆகலாம்,
கண்-மைகள் கண்ணிமைகளுக்கு களைநாசினிகள் ஆகலாம்,
கலாசாரங்கள் களவாக கள்(லா)சாரங்களும் ஆகலாம்...
-சி.சதுர்
Comments
Post a Comment