கைதியின் கதை

நிலத்திடம் கடன் கேட்டிருக்கிறேன்,

நான்கு மாதங்கள் பட்டினி கிடந்த

என் நிலத்திடம் கடன் கேட்டிருக்கிறேன்

சிறைக்குள்ளே நான் இருந்த நான்கு மாதங்களும்

என் பாதம் படாத நிலத்தை

நீர்ப்பாய்ச்சாத என் கைகளையும் – நிலத்திடம்

கண்ணீர் பாய்ச்சாத கண்களையும்

கவலையை ஒப்பித்துக் கொண்ட முகத்தையும்

கொண்டு வந்து கடன் கேட்கிறேன்...

 

சிறைக்குள்ளே கைதியாக நானிருக்க,

என் விலங்குகளுக்குள்ளே உன் குரல்.

புராணம் படித்தோம் சிறையறைகளில்,

சஞ்சயன் காட்டிய திரையில் என்

நிலத்தின் பாரதம் தெரிந்தது.

வெயில்பாணம் துளைத்த இடங்களில்

மேனி வெடித்து ரத்தம் வற்றிப்போனது

என் நிலத்துக்கு.

வலித்திருக்குமோ? வலித்துத்தான் இருக்கும்...

 

வலிகள் உனக்குப் புதிதில்லை

வெயிலும் உனக்குப் புதிதில்லை

நான் அறிய, தனிமை உனக்குப் புதிது.

பாம்பு ஊர்ந்ததால் வந்த பாதையோ,

பாதம் பதியப் பதிய நீண்ட பாதையோ?

நான் அறிகிலேன்.

என் நிலத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு

நீளும் பாதையது. என் கண்கள் மட்டும்

மறுபரிசீலனை செய்யும் பாதையது.

 

காட்டுவிரியனும் காட்டுப்பூனையும்

உனக்குத் துணையிருந்திருக்கலாம்,

கடன் கேட்டு நான் உன் காலைப்பிடிக்க- என்

கணுக்காலை உன் தோழன் கருநாகம் பிடிக்கலாம்.

நீரூற்றாத என்னிடம் கோபம் கொண்டு நீ

மண்வெட்டியை நெளித்து பகை கொள்ளலாம்.

முண்டாசு கட்டி நடப்பதற்கு, எனக்கெதிராக

மனுத்தாக்கல் செய்திருக்கலாம். - ஆனாலும்

வியர்வையை அடகு வைக்கிறேன் உன்னிடம்

 

வேறெங்கு போய் நின்றாலும்

ஊர் சொல்லும், சிறைப்பறவையை

நம்பி சீட்டுக்காசு குடுக்கலாமா?

நாட்டுக்காக்கைகள் வீட்டை விற்றுப்பறந்த

கதை கேளாதோரே! காக்கை-சிறையினிலே

கட்டாதோரே! இந்த சிறைப்பறவையின் சிறகுகளில்

சீனா செல்லத் தெம்பில்லை. – என்றாலும்

சின்னவயிறு உலைப்பானையாய் கொதிக்கிறது.

சிறை சென்று வந்தாலே சத்தியசோதனைதான்.

 

ஏன் சென்றேன்சிறைக்கு?, பெற்றோலை பதுக்கிய

தரகனா நான்? கடலுயிரையும் கப்பலையும் அலட்சியத்தீயில்

கொளுத்திய மாலுமியா? கருஞ்சிறுத்தைகள்

சிக்கிய கண்ணிகளில் ஒன்றையும்

சீவிக்கப் பண்ண முடியாத வன அதிகாரியா? திணைக்களமா?

யானைகளின் தந்தங்களை தரித்து

தும்பிக்கையை துண்டாடிய தற்குறியா?

தும்பிக்கையை நம்பி தாயகம் தாண்டிய கேள்விக்குறியா?

 

நிலமே கேள் என் கதையை,

நிலமகளே இதுவும் ஒரு கீதைதான்

நிலமகளை நான் பிரிந்த கீதை,

என் நிலமகளுக்கு வகிடெடுத்த எர்நுனியில்

நான் தூண்டில் புழுவாகிய கதை

நிலமகளே! நான் வாய்க்கால் வெட்டிய குழியில்,

வெட்டரிவாளை புதைத்த காட்டேறியிடம்

துட்டை துண்டு போட்டுக்கொண்டு துணைபோன

அதிகாரிகளால் சட்டம் விலைபோன கதை.

 

நிலமே பிணைக்கைதியின் கடைசி மனு இது!

உன்னைக் கடன் கொடு

நீரை வட்டியாய்க் கட்டி,  

உயிர் ஊசலாடும் அந்த நாள்,

என்னை அசலாக வந்து உன்னுள்

உறங்கிப்போகிறேன் என் கடன் தீரும் வரை...

-சி.சதுர்

 

 

 

 

 

 

 


Comments

Popular Posts