உயிர் வலை

மான் மறைக்கும் மைக்கண்கள்
தேன் நுரைக்கும் தினைக்கன்னங்கள் - பொங்க
ஏன் என்னை இடிக்குது மயக்கம் 
நான் உரைப்பதும் முறையோ கடிக்குது தயக்கம் 

திரைப்படம் காட்டும் திரையில் 
திரண்டு வரும் ஒளி போல - உன் 
மிரண்ட கண்கள் மின்னும் - அதில் நம் 
முப்பிறவியும் கதை பின்னும் 

எப்பிறவியும் இணைகின்ற உயிர்மெய்யாய் 
எக்காலமும் இருளாத் தூங்காமணியாய்
முக்காலமும் முடியாத காதல் முதல்வரியாய்
போர்க்கோலம் பூண்டேன் பூவின் புன்னகையால் 

இமயம் பிரிந்து போனாலும் 
இயங்கும் இந்திரிய உலகம் 
இங்கிவள் விட்டுப் போகையிலே 
இருண்டு போகும் இங்கிவன் உலகம்

சமயம் வந்து சொல்லும் - இவளோ 
மனம் சாயா பொய்மான்கரடு 
விநயம் பேசும் மனம்தான் விசும்பும் 
விட்டுப் போகாதே நானொரு செப்புத்தகடு 

மனக்குருவி! மனக்குருவி! 
மாலைவந்து மலர்தேடும் மனக்குருவியே!
மந்தி கொய்தது கண்டு மனங்குமுறும் மனக்குருவி
சிந்திய மகரந்தம் கண்டு மனங்குமுறும் மனக்குருவி

அவள் - அருவி நில்லாமல் நீண்டு வந்தே - மலை
அடியில் நின்றவனை மல்லுக்கிழுப்பதுவோ?
மனக்குருவி சொல்லாமல் சொண்டு கொண்டே
அடிமனதை கொத்தியும் கிள்ளுவதுவோ?

நிழலில் தஞ்சம் கொண்டேன் பட்டுப்பூச்சி 
கழலில் மஞ்சம் கொள்ளுமென் விட்டில் பூச்சி 
நிழல் தொடர்ந்து நிரை தொடரும் எறும்புச்சங்கிலி - சக்கரை
நிழலும் இனித்திடும், நீளும் நாளும் நினைத்திடும் 
நினைவிலே மனதிலே ஓராயிரம் கால்கள் ஊர்வலம்.

மனமெனும் மாய களத்தில் - அதன் 
மெய்நிகர் ஆட்டக்களத்தில் 
வனம் பாடும் வானம்பாடியின் 
இனம் பாடும் ராகம் தோடியோ?

கவிபாடும் கண்மணி கவியொன்று கேளடி 
இருபுறக்குவிவு வில்லையில் சிக்கி காலம்
துடிக்கையில் அது  நல்லை அல்லை தானடி 
ஒளியின் இறந்த காலம் தானடி அங்கோர் உலகம்
ஒளிராமல் உறங்குது பாரடி 

ஒளிராத உலகங்கள் ஒளி பெறவும் வேண்டும் 
உள்ளத்துதிராத பாகங்கள் உயிர் வலைகள் - அதில் 
உள்ளமெல்லாம்  புரியாத பாகங்கள்...
தெள்ளத்தெளிவாக தெரியும், ஆழம் கொண்ட மனதிலே
வெள்ளம் பாயும் - மனக்கரை உடையும்...
-சி.சதுர்




Comments

Popular Posts