பூவொன்று அழுகிறது...

பூவிடம் நலம் விசாரித்த

கவிகள் மறந்து போனார்கள்.

கவி கையில் கண்ணீர் உகுக்கும்

பூக்களை, தூரிகையாக்கிய புலவர்கள்

மறந்து போனார்கள்.

 

பூவுக்கு உவமை உகுக்க மறந்தே போனார்கள்!

சாவுக்கும் சுமை பாராமல் வந்து முகம் காட்டும்

பூக்கள் யாவுக்கும் சேராத முகஸ்துதியை

தேனீக்களாக உறிஞ்சிக்கொண்டு

பூவின் இதயத்தில் நெருஞ்சி*க்கொண்டார்கள்.

 

பாவின் பொருளறிந்து, பாவை குரலறிந்து

பூவின் சாறை பொருளாக்கி, அதை பாவை குரலாக்கி

கவிதா சாந்து பூசியவர்கள் பூக்களின்

கல்லறைக்காவலர்கள்.

 

கல்லறைப்பூக்களும் சில்லறையாகுமானால்

சொல்லுறைபாக்களில் சுருதி சேர்த்து

நல்லுரை ஆக்கி வில்லுறை வேந்தன்

வில்லுரை பிணைத்து சில்லறை சேர்த்த

சொல்லுரை வேந்தர்களே மறந்தே போனீர்!

 

ரோசாக்களின் உதிரத்தால் ராசாக்களின் 

கூசாக்களை நிரப்பி காசா பணமா

முடிந்து கொண்டீர். ஈசா பரமா என

ஒடிந்து போன ரோசா சிரமா சிரம் என

சிரம தானம் செய்யும் சி[ரு]ங்கார தோட்டம்...

 

பனிகொண்டு நெய்த பட்டாடை

பட்டுக்கொண்டும் படாமலும் படபடக்கும்

கனியொன்று உறங்கும் மணிவயிறு

அசைந்து நுனிப்புல்லில் தலைசாய்க்கும் பூவே!

கனி பிரசவிக்க பட்டுடை களைந்தாய்

கண்ணியத்தாயானாய்...

 

பெண்ணியம் பேசும் பேதைகள் சூடிடும்

பெண்ணியவாதியே! சிதைகளில் உடன்கட்டை

ஏறி, சீதைகள் ஆகும் தருக்களின் அரையுயிர்

அடைகாத்த நுண்ணியவாதியே! அழகின்

கொடைகாத்த இலக்கியவாதியே! பூவே...

 

மடைசேர் நீராக மனம் சேர்ந்த மௌனத்தை

உடைத்தே ஆறாக உனை சேர

கவிக்கால்வாய் கட்டவிழ்த்தேன், கட்டித்தேன்

கொட்டிக்கிடக்கும் மொட்டுக்குள்ளே

முகம் புதைத்தேன்...

 

பூவின் பட்டாடை நழுவிய பனித்துளி

முகம் தட்ட விழித்தேன் – என்

முன்னே பூவொன்று அழாமல் அழுகிறது...

-சி.சதுர்

Comments

Post a Comment

Popular Posts