கிறுக்கல் நினைவுகள்
மனம் சயனிக்கும் நிலையொன்றில்
மலை விழுங்கும் கனவுகள் கண்ணுக்குள்ளே
வலை வீசி கனா பறிக்கும் கண்களே
விலை பேசும் கனவுகள் நிலையாகுமோ?
உயிரோடும் ஓவியத்தின் கதையை சொல்லும்
மயிர்த்தூரிகை தூவிய நிறங்களே
செயிரும் வயிறும் பின்னிய வாழ்க்கை வலையில்
சிக்குண்ட தூரிகைகள்
கருவி கட்டுப்பட காவியமெங்கே ஓவியமெங்கே
அருவி பாயும் தடத்திலே தேங்கும் தண்ணீரே
உருவம் மருவி மருவி மலை வழியே வழியும்
நீரோடையில் நீராடும் மீன்களாக...
அங்குமிங்கும் அலைபாயும் மனமே!
தங்குமிடம் தேடி வரும் தென்றலை
தாங்கிக்கொண்டு தூக்கம் தொலைக்கும் தென்னையே!
தூங்கும் மனமே, துக்கம் தேடிவர தேங்கும் மனமே!
சுவர்மேலொரு பட்டுப்பூச்சி, மனச்சுவரிலொரு பட்டுப்பூச்சி
எப்பக்கம் குதிக்குமோ என அ(க)ப்பக்கம் படபடக்கும்
பட்டுப்போன மரத்திலே பட்டா வாங்கிய கரையான்கள்
பட்டுப்போன மனத்திலே படுத்திருக்கும் கோட்டான்கள்
வனமொரு மனமானதா? மனமெலாம் வனமானதா?
தினமொரு பிணமாகத்தான் விழித்தெழும் ரணமானதா?
தனதிரு கைக்கொண்டு தான் தலையணை கனமானதா?
தலையணை கனமானதால் தலைக்கனம் குணமானதா?
நரை தொடும்போதிலே குறையெலாம் குடிகொள்ளுதா?
நரை வந்து படும்போதிலே நிறையெல்லாம் குறையானதா?
குறை தேடும் மனமானதா, கறை தேடும் மனமானதா?
நரை வந்து உடல் சோர்ந்ததால், படகு கரை வந்து சேர்ந்ததா?
இனி நினைந்திரக்க இனிய பொழுதுகள் கதைகளாக,
கனி பறித்த தோட்டங்கள் கதைக்களங்களாக,
கவண் வீசியெறிந்த கல் நினைவுக்குளத்தில் பட்டுக் குதிக்க
கிறுக்கல் நினைவுகள் கருக்கல் துணையாயின....
நினைவுக்குளத்தில் அருந்திய நீர் அடைத்துக்கொண்டு
கண்-நீர்சுனைவழி கசியும் பொழுது இமைகள் ஈரமாகும்
குளத்தின் பரப்பில் இமைகள் மூடி இதயம் நனைக்கும்
கேசரிகள். மனத்தின் வாசல் விழியென, கண்ணீர் சுரப்பிகள் சொல்லும்...
-சி.சதுர்
Comments
Post a Comment