தட்டான் கூட்டம்

முகரா முகரா நாணயங்கள்

நகரா நகரா ஓவியங்கள்

நிகரா நிகரில் காவியங்கள் 

நயாகரா நயந்திடும் நாட்டியங்கள்


தகரக் கொட்டில்கள் 

தண்ணீரில்லா காட்டிற்குள்ளே,

சிகரத்தில் தொட்டில் கட்டும் 

சீதள காற்றே உன் தொட்டிலாடும்...


சிகரம் போன காற்றே, சோரம் போன காற்றே!

காட்டின் தொட்டில்களில் கோடலிக்கு ஏனோ தாலாட்டு

மேட்டிலே தொட்டில்களுக்கு கால் முளைக்க 

முடமானது காடு...


தூளி ஆடும் தென்றலே!

தூரம் போனதென்னவோ?

ஆழி ஆடும் மீன்களே! 

பாட மறந்த தென்னவோ?


தோழி ஆன தென்றல் தொலைந்து போக

பாதி வழிதூரம் நான் தொலைந்து போனேன்.  

ஆழி சேரும் மதியே சேதியேதும் உண்டோ?

தோழி என் தோழி தொலைந்தாள்... 


கடலுக்குள் மீன் பிடிக்கப் போனாய் 

பிறைநிலவே! நான் வீசிய தூண்டிலில்

பிளாஸ்டிக் புழுக்கள் துடிக்கும்,

உள் மனமெல்லாம் ஊசி துளைக்கும்.


தென்றல் தொலைத்த முற்றத்தில்

தேங்கிக் கிடக்குது உயிர் மூச்சு.

கானகம் கூறிக் கூறி, கூரான வாளுக்கு  கைப்பிடி எடுத்தோம்.

வானகம் கூறிக் கூறி கூரை பிய்த்து, 

விண்வெளி கண்டுகொண்டோம்.


முகரா முகரா நாணயக் குவியல் 

முகர்ந்தோம், நுகர்ந்தோம், மூர்ச்சையடைந்தோம்.

நகரா நகரா நில ஓவியத்தை

தகர்த்தோம், தரையகழ்ந்தோம், நிறமிழந்தோம்.

நிகரா நிகரில் கானக காவியங்கள் 

நசித்து ரசித்தோம், நசிந்தோம். 

நயாகரா நயந்திடும் நாட்டிமொன்றே! அன்றே

ஆழியெழுந்து ஆடிமுடித்தது, அச்சத்தில் மீனோ பாட மறுத்தது. 


ஈழத் தீயாடும் தட்டான் கூட்டம் நாம், ஆனோமே!

காலத்தீயில் சுட்ட சோளத்தோட்டம்.

மேலைத்தேய தட்டான்கள் மென்று தள்ளும் 

கீழைத்தேய சோளத்தட்டைகள்...


தட்டான்: கிழக்குரங்கு


-சி.சதுர்















Comments

Popular Posts