அகக்கடல் ஆழம் அலைகடல் அறியுமோ?

நிலவொளிரும் நேரம் நீயொளிர்ந்தாய் நிலமே 

நிலம் வீழ்ந்த மீன்கள் மிதக்கும் நிலாக்குளமே 

உள்ளமிரண்டு மிதக்கும் தூண்டில் புழுக்கள் - அன்பு 

வெள்ளம் திரண்டு வர வாடிய விழித்தாமரைகள்


இதழ்விரித்த செம்மலரே இதயம் ஒளித்ததேனோ?

நுதல் மறைத்த பிறைநிலவே, இதயம் ஒளித்த தேனோ?

கடல் மறைத்த கட்டுமரத்தில் காணாமல்போன மீனவன் 

அகக்கடல் கரைசேர கலங்கரை விழிகள் தேடுகிறேன்


அலையும் அகக்கடலில் அலைகள் அலைவதனால் 

அலைநடுவே கட்டுமரம் தட்டுத்தடுமாற

தலை கிறுகிறுக்கும், விழியில் அலைகள் ஓவியம் கிறுக்கும்

மலைசுமக்கும் மனதில் அலைகள் மோதிக்குலுக்கும் 


பள்ளம் மேடு தரைவழியே தாண்டிவிட்டேன் 

துள்ளும் அகக்கடல்வழியே பள்ளமெங்கே மேடெங்கே?

நகரும் நீர்மலைகள் போலே எண்ண அலைகள் சுத்தக்கடலிலே,

நகரும் கண்ணீர்நதிகள் கலக்கும் சித்தக்கடல்


சுற்றிவரும் பாய்க்கப்பல்கள் அவை சூழுகின்ற விழித்தெப்பங்கள்

பற்றி வரும் என் மனமே, பதுங்கிக் கொண்டேன் 

கட்டுமரம் பிரித்து கடலில் மூழ்குகின்றேன் 

காற்று வந்து பாய்மரங்களை களவாடிப் போகும்வரை 


விழியின் பாய்மரத்தில் கைதியாவதை விட 

ஆழியெனும் என் அகத்தில் அமிழ்ந்திருப்பேன்

வாழி வாயுதேவா! வாடைக்காற்று வீச

வந்தவழி விரைந்தன அந்த நொந்த விழிக்கப்பல்கள்


நிலா மறைய ஒவ்வொன்றாய் உதிரும் விண்மீன்களே 

கடலில் விழுந்தால் மூழ்கும் என்னை கரைசேர்ப்பீர்

கரையோர மணலில் கால்கள் புதைத்து நிற்பேன் 

கரைதீண்டும் என் மனக்கடலை கண்டு நகைப்பேன் 


கரைசேர்க்க விண்மீன்கள் வரவில்லை

கண்மீன்கள் கண்ணீர் குடித்து கலங்கி மூழ்குகிறேன்

அகக்கடல் ஆழம் அறியவில்லை நானும் - உயிர் 

தகிக்கும் இக்கடல் ஆழம் கண்டு வருவேன் கட்டுமரமே


முதுகை முத்துச்சிரிக்கும் கடல்மணல் முத்தமிட 

மூழ்கிப்போனேன், அகக்கடல் ஆழம் தொட்டேன், 

கால்முளைத்த கல்லாக அமிழ்ந்து போனேன், 

வால்முளைக்காத வாணரமானேன் மனமே...


கண்ணீர் அரிக்கும் கடல்க்காற்றுடன் கைகுலுக்க வேண்டும் 

வெந்நீர் ஊற்றுகள் ஒளிந்து கிடக்கும் அகக்கடலை 

தூர்வார வேண்டும், கட்டுமரமே கைகொடு 

கால்முளைத்த கல்- நான் தெப்பமாக வழிகொடு....


அகக்கடல் ஆழம் அலைகடல் அறியுமோ?

அகக்கடல் ஆழம் கண்டால் அலைகடல்கள் நாணம் கொள்ளுமே

நகக்கடல் ஆழமே எம் ஆழம் என நகர்ந்து நிற்குமே

அகக்கடல்களே ஆழம்... ஆழம்.... ஆழம்... 



-சி.சதுர்


















Comments

Popular Posts