நீயும் பொம்மை நானும் பொம்மை!

நீயும் பொம்மை நானும் பொம்மை 
நீலவானம் நீளும் மேகம் எல்லாம் பொம்மை
நீயும் நானும் நீளும் நாளும் 
நீங்கா சோகம்... தூங்கா மேகம்...

நிலாவிலொரு பாட்டி சுட்ட வடையை
வரிகளில் சுட வந்தான் - என
திட்டும் வாசகர்களே! 
சுட்ட வடையை மீண்டும் சூடு பண்ண 
சொல்லடுப்பு மூட்டுகிறேன்!

பொம்மை உலகில் ஆளும் பொம்மையின் 
ஆசன சாவியில் அதிகார துருவேறி 
கோளாறு செய்ய கொதிக்கும் குருதியாறு.
மாசான செங்கோலின் கோள் - அறு 
பதிகம் பாட வந்தேன்!
ஆசான அரசனாக ஆள் மாறி ஆள் வந்து 
கோல் தூக்க அசைபோடும் அமைச்சர்கள், 
இந்நாட்டின் நீங்கா சோகம்
குடிமனங்கள் தூங்கா மேகம் 

வாளாற்றில் பிறந்து - வாள் 
கீறிய மீன்பொம்மைகள்,
வாளுக்கு வாக்கப்பட்டபின் வாலெதற்கென 
வாலரிந்து வாக்கிட்ட மீன்பொம்மைகள். 
வாள் கீறிய தடமெல்லாம் கட்டை விரல்கள்,
தேள்கீறிய இடம்போலே தடித்திருக்க
தோல்கீறி அத்தடத்தில் பகுத்தறிவை 
பதுக்கி தைக்க வேண்டும், 
தோல்கீறினால் அங்கே,
கட்டை விரலில் பணத்தின் வாடை ...

முன்னொரு நாளில் கொதித்த குருதியாறு
குதித்த தடம்  வற்றிப்போனதால் - அந்தக்
குழியில் கரன்சி ஊறி இருக்க வேண்டும்.
கட்டை விரல்களில் ஊறிய கரன்சி
கரங்களை கட்டிப்போட, கண்களும் 
காதுகளும் கட்டிக்கொண்ட குரங்குப்பொம்மைகள்...

கட்டை விரல்கள் வாடகைக்கு வாங்கப்படும்! 
கடை விரித்த கடன்காரர்களுக்கு,
நடைபாதை நடைபிணங்கள் நகங்களில்
நகலெடுத்தாற் போல் ஓட்டு முத்தமிட
கைமாறும் தாய்நாடு...
வாழ்க கடனாளிகள்!
வாழ்க கட்டைவிரல்கள்!
வாழ்க குரங்கு பொம்மைகள்!
வாழ்க வாளாற்றின் வரலாறு மறந்த மீன்பொம்மைகள்!  
-சி.சதுர்


 











Comments

Popular Posts