நகரும் ஹைக்கூக்கள்

சக்கரை சுரங்கத்தில் இரத்தினக்கல்லை

சல்லடை கொண்டு சலித்துக்கொண்டிருக்கும் 

சிற்றெறும்பே! சொல்லடை கொண்டு, இரத்தினக்

கல்சுமக்கும் உனக்கு கவி பாடவோ?


மெல்ல நடை பயின்று, கல்லோவியம் நீ கீறி 

கல்லோவியத் தேய்மானத்தில் பல்லாங்குழிகள் 

படைத்தனையோ? நீயூறக் கற்குழியும் போதே, உன் 

உளிக்கால்கள் பாறையில் பரதம் பயின்றனவோ?


பாறைக்கு சட்டை தைக்கும் ஊசிக்கால்களால்

பரபரவென, தட்டான் மோதிக்கவிழும் இடம் 

படையெடுக்கும் செவ்வெறும்பே! உயிர் பாதியாய்

விடைகொடுக்க தட்டான் சுமந்தே செவ்வெறும்பு ஊர்வலம்.


தட்டுத்தடுமாறி விட்ட இடம் தொடரும் வரிசையில்

தரிசில் காட்டை தனியே விட்டு

அரிசில் காட்டுக்கு அங்கப்பிரதட்சணம் போகும்

அடிசில் தேடும் மூவிருகால் அடியவர்க்கோர் கவி


அணுவிஞ்ஞான அதிவேக பாதைகளில் 

ஆயிரங்கால் மனிதமண்டபங்கள் குதிகால் 

பதியும் வீதிகளில், ஆயிரங்கால் அணிவகுக்கும்

பதாதிகள் பலம் பெற நிகண்டு மொண்டு கற்கண்டு கொண்டு

பலகாரம் சுமக்கும் சிறுகூலி சித்தாளுக்கோர் கவி 


அரசாளும் ஆசை வரத்தான் அவகாசம் எங்கே,

அறுகரிசி சிந்தும் அரிசிமணிகள் ,

அறுகால்  சித்தாள்கள் சுமக்கும் சிந்தாமணிகள். 

அரசேவல் புரிய அரிசியோடு கப்பலேறும் அறிவுமணிகள்

சிற்றரசியின் குற்றேவல் கீழ் அரிசியும் அமுதமோ?


செம்படை ஊர்ந்த ஊன்-பூமியெலாம் 

செந்நிலமாகும், செவ்வெறும்பரையர் கண்ட

மனிதக்களமெலாம் புண்ணிலமாகும்,

கணிதம் பயிலா கட்டிடக் கலைஞரே! கட்டெறும்பே,

கட்டும் புற்றில் புயல் புகாவிடம் கண்ட புவியியல்

வல்லுனரே, வட்டில்வடிசாதம் வடித்த இப்பாட்டை ஏற்பீரோ? 


தலையணை நிலங்களில் தங்கி

புனிதப்போர் மூட்டும் மூட்டைப்பூச்சிகள் மூட்டை கட்டும்,

எறும்பாளூர் வேளாளர் கோட்டை கட்ட புறப்பட்டால், 

ஏட்டை அரியும் கறையான் மண் மேலே எழுப்பிடும் கோட்டை,

ஏட்டை அறியா எறும்பார் அறிவார் 

இருக்குமிடம் அறிவியாத மணல்க்கீழொரு கோட்டை

மணல்க்கோட்டை...


ஜப்பான் நதியில் நீந்தும் ஹைக்கூபூக்கள் போல

அளவெடுத்த மூவடுக்கு கால்கள்,

அளவிடா மனப்பாரத்தை அரைக்குக் கீழே

கட்டி வைத்த ஹைக்கூவின் ஆச்சரியமாக

ஆடுகின்ற அடிவயிறு, மெழுகுருக்கி மேனி மின்னும்

ஆறு -அடி ஹைக்கூக்களுக்கு ஆறறிவு 

அளக்கவில்லை, ஆறறிவு ஆத்மாக்கள் 

ஆழ்மனதில் ஆரண்யகாண்டங்கள்...


மூவறிவு போதுமென உதித்த-கரிகாலன்,

மூன்று ஹைக்கூவின் வாழ்க்கை வரிகள்

உச்சரிக்கும் ஓசை உழைப்பெனும் வார்த்தை,

எறும்புக்கும் இசை பாட வந்தேன் - நிலத்தோடு

நசிப்பினும் நகர்ந்து போகும் - அதன்

இரும்புமனம் பாட வந்தேன்...

-சி.சதுர்






 

 








 



 






Comments

Popular Posts