காட்சிப்பிழைகள்

விழியோரம் களியாட்டம் விண்மீன்களின் ஒளியாட்டம் 

வழியோரம் பூந்தோட்டம் வழிப்போக்கன் விழித்தேட்டம் 

மனமாலை மலர்க்கூட்டம் மலர்வாசம் மனம்பேசும்,

விழிபேசும் விளையாட்டில் மொழிகள் மொட்டவிழும்.


விழிவிழிகளில் விழும் துளிகளில் - விழும் 

ஒளிபிரள்கையில் எழும் வானவில்லே

மனபாரம், மழைமேகம் அந்த வானம் சுமக்கிறது 

வானவில் மீட்டியே என் வான்மழை வடிகிறது.


வான்மழை கண்மழை வடியும் நீர்மழை

கண்சிமிட்ட காணாமல் போன வானவில்லே 

தேன்மழை தேடும் தேனீக்கள் முட்டியே 

மலர்மனம் அவிழ்கின்றது மகரந்தம் கவிழ்கிறது


பூமனம் திறந்தபின் பூவிதழ் வாடுமுன் 

பூவிடம் மனம் திறந்துவிட்டேன் அதன் 

புன்னகை வாசத்தில் என் சுவாசத்தை சேகரித்தேன் 

மென்மலர் உதிராமல் மெல்ல -

சுவாசத்தை நிறுத்தி வைத்தேன்...


மணல்மேலொரு திவலைபோல் உணர்வுகள் உருளும் 

கனல்கொண்டு சூரியன் சுடத்தான் - அதன் 

வெப்பத்தை அடைகாத்தேன் - அந்த 

வெப்பத்தில் வெதும்பியது என் பனிமூட்டம்


நிதம் நிதம் நித்திரைகளில் கனவுகள் சேகரித்து

சேரும் கனவுகளை கரைவரும் அலைகளின் 

நுரைகளைப் போலே மறையாமல் காக்க

ரதம் ஏறி ரதம் ஏறி கனா வேட்டை சென்றேன் 

பொய்மான் கனவுகளின் குறுக்கே ஓட - புலித்தோல் 

போர்த்த மான்களை விழிகள் தேடும்...


கவரிமான் கனவுகள் கண்டவுடன் கன்னம் சிவந்து 

நினைவிலே மரித்துப் போன கனவைத் தேடும், 

காட்டுக்குள் கட்டுவிரியன்கனவுகள் காலைச்சுற்றும்

கனா ரதம்  உருண்ட பாதைகளில் நரிகளின் கூடாரங்கள் 


இடர்வரும் பொழுதென் இமைகள் படபடக்க 

படர்மேகம் இருளைக்கொடுக்க இதயம் ஈர்துண்டானது,

மழைக்காற்றில் மறந்துபோன சாளரக் கதவுகள், 

இதய ஓரங்களில் சடசடவென சன்னல் சப்தம்...


வெட்டும் மின்னலை கட்டும் இடும்பன் கொடிகளை

கொட்டும் பறைஇடி தரைமுட்டும் மழைத்துளி, 

கைதட்டும் கிளைகள் கொடிகளில் சன்னதம்,

தலைமுட்டும் குளிர்காற்றில் கூந்தல் முடியும் பாஞ்சால தென்னைகள் 


கொட்டுப்பிடி  கொட்டும் உளி, உயிர் கொட்டும் சிலை 

கொத்தும் வயல் கொத்தபுடை நெல் கொட்டும் உலை

கொட்டம் தோய்ந்த கொடுவாள் நுனியில் குருதி அலை 

கொப்பம் வெட்டி, கொம்பன் அதில் விழச் சூழும் நரிகள்... 


கால்வருடும் நிலத்திடம் தோள்வருடும் காற்றிடம் 

பால்திரளும் விழிகளில் விழும் வண்டிடம் 

புனை சுருட்டு புனைந்திட முடிந்திடுமோ - பிரளயங்கள்

புனை கதைகளால் மறைந்திடுமோ?


கனா உலாப்போகும் தேகம் கனா உலாப்போகையில் 

காணும் காட்சிகள் யாவும் காட்சிப்பிழைகள் - என்றே

மனமொரு நிலையில்லை, மனமொரு நிழையென

மனம் நினைப்பதுவும் சரியோ? 


உந்தன் விம்பம் என் கண்களில் - உயிர்

உரையும் என்மனம் தன் விம்பம் தேடும்,

புண்களில் தேடினால் கிடைக்கும் - மனதின் பொய்புகலா 

எண்ணங்கள், புண்களில் தேடினால் கிடைக்கும்.


பூவிடம் தோற்று பூவிதழில் தஞ்சம் கொள்ளும் 

மனமலர்களின் வாசம் தேடியே - வனமலர்க்கூட்டம் 

வாடிப்போகும், மனமலர் வாசம் அறியமுடிவதில்லை 

மனமலர்களை முக-இதழ்கள் மூடிக்கொள்வதால்...


-சி.சதுர்
 












Comments

Popular Posts