சாம்பலில் சிரிப்போர்
மண்தோன்றி, மலர்தோன்றி - மனிதன்
தோன்றி, மனம் தோன்ற பின்தோன்றிய
கண்ணீரின் காவியத்தை கட்டடக்கிக்
கூற கரிக்கோல் கரைகிறது.
கருவறைவிட்டு இந்நிலவறையில்
கண்விழிக்கும் உயிர்கண்டு கருவறைத்தெய்வம்
கண்பனிக்க தோன்றிய முதல்த்துளி
கண்பழகிய முதல்மொழி - கண்ணீர்த்துளி.
கன்னங்கள் வாங்கிய முதல்முத்தம்,
கன்னக்குழியில் பெய்த முதல்மழை,
எண்ணங்களின் முதல் பிரசவம் -அது
கண்ணீர்நதிகள் கிளைவிடும் அணைக்கட்டு.
நன்நீர்மீன்போல் நயனங்கள் துடிக்க,
கண்ணீர்க்கடலில் இமைகளோரம் உப்புக்காற்று,
மனப்புண்கொத்திப் பறந்த மனங்கொத்தி,
செந்நீர் கொப்புளிக்கும் கண்நீர்த்தடம்.
அறைகளின் ஓரங்கள் - தலையணை ஓரங்கள்
நனைந்துபோக கரைந்து போன கண்ணீர்.
உறைவாளின் ஓரம் உதிரத்தின் ஈரம்,
உலைப்பானை ஓரம் உழவனின் கண்ணீரில்
உலைகொதிக்கும்...
கண்ணீரோ பட்டம் பெறாத வழக்கறிஞர்,
திட்டம் இல்லாத தீவிரவாதி,
குற்றவாளிகளை கண்ணீர்விலங்குகளில்
கழுவேற்றும் கண்காவலதிகாரி.
கருப்பு வெள்ளை தேயிலை தோட்டத்து
கண்காணி, - வலிகளில் வழிந்தோடும்
செந்நீரை முத்தமிட்டே சிவந்து போன
தேயிலைச்சாயம்- நிறம்பெற விரைத்துப்போன
தேயிலைகள் - தொழிலாளர் விரல்கள்.
பழங்கொத்திய பசுங்கிளி இலவு காக்க
உளம் கொத்திய வலியை செலவு செய்யும் கண்கள்,
மண்கொத்தியே உழவு செய்யும்
மண்வெட்டியின் பிடியில் வறுமைப்பிளவுகள்.
பிளவுகளில் புகுந்துகொண்டு பிடிகளை
அரிக்கும் அரசியல் கரையான்கள்,
பிளவுகளில் பிறந்த பிள்ளைக்கரையான்கள்
கொள்ளை பயில விறகுகளாகும் பிடிகள்.
மண்வெட்டிகள் விறகுகளாக, விலைபேசி
உலைநெருப்பில் வயிறு எரிய, உலையடுப்பில்
உண்டிகொதிக்கும், விறகுகளின் பசியை
விசாரிப்பார் யார் - என்று எண்ணுகையில்...
உலை நீராவி படியும் உலைமூடி கண்ணீர் விடும்
சாம்பலில் சிரிக்கும் மண்வெட்டிகளை நினைத்து.
புகை சாம்பலில் புனல் தெளித்து அனல் தணிக்கும்
புத்தி கொண்ட அரசியல் அகப்பைகள்.
அரசியல் அகப்பைகள் படியளக்கும் படிகளில்
வாக்கு வங்கிகள் வாய்பிளந்து நிற்கும்,
அகப்பைப்பிடிகள் ஆரோக்கியமாக இருக்கின்றன,
மண்வெட்டிகள் சாம்பலில் சயனிக்க...
கண்தோன்றிக் கண்காணா கண்ணீர் - இந்த
மண்தோன்றிய எம் மண்-நிற உழவன் -
கண்ணீரோ கண்தோன்றியதில்லை,
விண்-நீர் பொய்க்க மெய்சுரந்த கண்ணீர் நதிகள்...
-சி.சதுர்
Comments
Post a Comment