கேள்வித் தீ

நிலம் தீண்டி நிலா தீண்ட செல்கிறேன் - என் 
நிலவிற்கு விழா காண போகிறேன் 
கடல் தீண்டும் கரையாகிப் போகிறேன் 
கரைகளில் கடல்நண்டாய் ஆகிறேன் 

கனா காணும் கண்களில்
வினா, வினா, வினா விதைகள்
விருட்சமாக வேர்விடும்
களிமண் நிலத்தின் கள்ளிச்செடிகள் 
பூத்தது போல் மனதின் ஓரம் 
பூக்கும் கேள்விச்செடிகள்...

முள்தைக்கும் முன்பே சொல்தைத்து
சிவந்து போன சிந்தையில் 
நினைவுக்குருவி கூடுகட்டும்.
சிட்டுக்குருவிகள் சிறகை விரிக்கையில்
சிறுநாகம் கூட்டில் புகுந்து கொள்ளும்.

சொல்தைத்த சுவட்டில் மறு-நாகம் 
பல்தைத்து படுத்துக்கொள்ளும்,
வில்தைத்த தோள்வடுவான் 
கல்தைத்து கடலிலிட கரைதொடுக்கும் 
கற்பாலம் போல, உடலோடு உளம்தொடுக்கும் 
பாம்பன் பாலம்...

கள்ளிச்செடிகளை சுற்றிக்கொண்டு 
கண்ணீர்விடும் தண்ணீர்ப்பாம்புகள்,
கேள்விக்குறிகளில் சிறகுகள் சிக்கிக்கொள்ள
கண்ணீர்விடும்  மனக்குருவிகள்- ஆயிரம் 
கேள்விகள் அனல்விடும் மனவேள்வித் தீ.

விடைதேடும் கேள்விகள்- நாங்கள்  
விழிதேடும் நீர்ப்பூக்கள்,
விடைகளும் விடியலும் தூங்கும் 
உள்ளம், உதயத்தின் நேரத்துளிகளில் 
உதிக்கும் விடைகள் கேள்விகளை சேர 
கரைசேரும் வினாத்தாள்கள் நாங்கள்.

கரைகண்ட பிறகு கடல்நண்டு திரைகடல்கேட்கும், 
மரைகண்ட பிறகு மலைச்சிங்கம் மரை-உடல்கேட்கும்,
கேட்பதுவும் வேட்பதுவும், வாய்த்துவிட்டால்
வாழும் வாழ்க்கை வாடகை வாழ்க்கை ஆகிவிடும்.

நடைபிணங்கள் நடமாடும் நடைபாதைகளில்
பிணங்களோடு பிணமாய் பின்தொடரும் 'பிழைக்கத் தெரிந்தவர்கள்'.
மனங்களோடு மனம்விட்டு மறுமொழி பேச 
மஞ்சள்நோட்டுத் தரகர்கள், 'உழைக்கத் தெரிந்தவர்கள்'.
பணம்திறக்க மூடிக்கொள்ளும் மனப்பெட்டிகள்,
பணம்சுமக்கும் முதுகுகள், ரணம் சுமக்கும் கழுதைகள்.

கடலோரக் கட்டுமரம் கற்றுக்கொடுக்குமே - அந்த
அலைகளில் அல்லுண்டு மூழ்கிய கலங்களின் 
முகவரிகள் முணுமுணுக்கப்படும் என்று.
அலைகளுக்கு பயந்து கரைகளை கட்டிக்கொண்ட...

கரைநண்டுகள் கரையான்கள் குடியிருக்கும் 
திரைகாணாமல், நரைவெண்மணலில் நரைகண்டு,
கரையானுக்கு இரையாகும் கலமாக இங்கு நலமாக 
நிறையவே கலங்களை காலம் மறந்துவிடும்...

-சி.சதுர்





    

 









 


Comments

Popular Posts