மகோததி

மீன்கூட்டத்தில் மிதந்து வந்த 

நட்சத்திரங்களை மிதித்துத் தாவும்

பவள இறால்கள், சுதந்திர சமுத்திரத்தின் 

பவளப்பாறைகளில் பள்ளி கொள்ளும் 

தோணியாமைகள் - தனிமை விரும்பிகள்...


நீர்மேலே வாழ்க்கை வாழும் 

பிற்போக்குவாதிகள், நிலையாத 

அலைகளுக்குள் சிக்குண்டு தண்ணீரில் 

கண்ணீரை தொலைத்தவர்கள்...


தண்ணீர்வாதம் செய்யும் தண்ணீர்வாழிகள்

கண்ணீர்வாதம் அறியா கண்ணியவாதிகள்

நீர்குமிழிக்குள்ளே உயிர்க்காற்று கொதிக்க 

நீர்க்கோழி கொதிக்கும் குழம்பில் உயிர்தேடும் குழப்பவாதிகள்...


நீர்ஊடகமூடே உயிர்வாழும் உவர்நீர்நாடே - அக் 

கடலுக்கு அகழிகட்டும் ஐயிரண்டு கால்நண்டு,

மணல் திடலிலே பங்கர் வெட்டும் ஆமைகள்,

புனலாடும் திமிங்கிலங்கள் பிரள, பிறக்கும் அலைகள்


வரைபடம் கீறும் நண்டானும் சுண்டானும் 

திரை கொண்டோடும் வரிகளை 

கரைவழியே விட்டுச்சென்ற பத்துத்தோள் வலைஞர்களின்

கொட்டில்களின் கூரைகளை தட்டும் உப்புமழைகள்


பெட்டி படுக்கை பொதியோடு விதிவிட்ட வழியென 

உறவு வெட்டி கடல்கடக்கும் கப்பல்களை

கரைக்கழைக்கும் கடலலைகள் - காலியாகும்

துறைமுகங்களில் தரையிறங்கும் புஷ்பக புள் விமானங்கள்


அலைகள் அநாதையாகும், கரைகள் கால்களை ஏங்கும்,

சுழற்காற்று பம்பரம் விளையாட பாய்மரம் கேட்கும்,

கடற்காற்றோ கரியமிலமாக கார்மேகத்தை 

கவர்ந்து கொள்ள, இலைகளை இறுக்கி 

அணைத்துக் கொள்ளும் அலையாத்திக்காடுகள்...


நெருங்கி நெருங்கி வரும் திரைகளை 

நெடுநீர் கரைகள் விட்டு விலகி விலகி நிலம் சுருங்கும்

நெருடும் மனங்களை வருடும் நெய்தல் காற்று  

நெகிழும் மணல்களில் கால்களையும் கவலையும் 

புதைத்துவிட்டு  சிதைவிட்டு சிறகடிக்கும் மனங்கள்...


நொவ்வல் சேரும் இவ்வுலகில் 

வலைஞர் வட்டிலில் விறால் மீன் முட்கள்

விறால் மீன் வயிற்றில் நெகிழிப்புழுக்கள்

நெளியும் சேதன சாத்தான்கள் ...


கடல் மேல் விழுந்த கண்ணீர்த்துளி - வானம்

வெண்மடல் கசக்கி உகுத்த கனல்த்துளி

வானத்தின் விழிகளில் அமிலக்கடல்கள் - நம்

மௌனத்தின் எதிர்த்தாக்கங்கள்...




-சி.சதுர்




 




Comments

Popular Posts