இராட்சச மாமனே!

களவாடிய பொழுதுகளில் கண்ணன் கோபியரை 

கோபம் செய்ய, மாமன் கம்சன் கைப்பிரம்புடன் 

கட்டித்தயிர் முட்டிநிற்கும் தன்னுயிர்க்கூட்டை 

காவல்செய்ய, எட்டி அந்த முட்டி, முட்டி கவிழ்ந்ததுமே...


கொட்டியதயிர் பானைபோலே கெட்டிஉயிர் கொட்டிடுமோ? - தன்

வட்டி போட்ட பாவம் வந்து, உயிர் கேட்டிடுமோ? 

எண்ணி எண்ணி கண்விழித்தாய் கம்சா! இம்சை தரும் 

மருமகனை மண்குழிக்குள் மூடிவிட சூது செய்தாய்.


தூது சென்ற புறாக்கழுத்தில் மயிலிறகை கட்டிவிட்டாய், 

தட்டான் இறகுகளில் அவன்தலை கொய்யும் 

திட்டங்கள்  தீட்டிப்பார்த்தாய், மாமன் - தன் 

மருகன் தலை மடியில் தவழ மலைதோரும் தவமிருந்தாய்.


கணநேர கோபாக்கினியில் ஆருயிரை

எளிதில் எமன்கையில் இழந்துவிட 

மனமில்லையோ மாமனே - தங்கைமணமுடிய 

வந்த மரணச்செய்தி எய்திய மறுகணம் - உன் 

மனமும் மனமுறு தங்கையும் மாமன்சிறை செய்ததென்ன?


சீர்தட்டெடுத்து மாங்கல்யம் திருத்தி - அந்த 

ஆவிடை தலைவன் கையில் பூவிடை மங்கை,

ஆருயிர் தங்கை கைகொடுத்த தமயன் மனம், 

பூவிலிருந்து புறப்பட்டதோர் பூதம்!


ஏவலீர் மகளிர் தொண்டுசெய், 

வெண்தயிர் வேய்க்கரத்தாள் பாவைபூவை 

சிறைசெல்ல சிறைவாசல் திறந்துகொள்ள, 

சிறையோன் மனவாசல் மூடிக்கொண்டது.


மார்கழிமலரின் இதழ்களின் கண்ணீர் 

கார்குழல் நங்கை கம்சனின் தங்கை கன்னத்தில் உருளும்,

போர்மூளும் மனத்தான் இரங்க மறுத்தான், 

யார்மூலம் வரும் மரணம் என்றே எண்ணியவன் 

இருக்க, பேர்கூறி அழைத்தான் மருகன், "மாமனே வா போருக்கு..."


இது கலியுகப்போர்...

கண்ணனைத்தேடும் கம்சர்களின்  போர், 

கோகுலத்து புல்வெளிகளில் கஞ்சாசெடி 

விதைக்கும் ராதைகளின் போர்... 

ராவணனிடம் தப்பி ராமர்களிடம் 

மாட்டிக்கொண்ட சீதைகளின் போர்...


கனிகின்ற மரம் கல்லடிபடும், கல்லில் வேர்விட காத்திருந்து 

பாறை பிளக்க ஊறிய நீரில் குளிர்கின்ற நிலமகள், 

நிலம் சேமித்த வைரக்கல்லை - நில

வயிற்றை கிழித்து வெளியே எடுக்கும் பிணந்தின்னிகள்...


பயணம் செல்லும் நாம் பூமியின் விருந்தினர்கள்,

பிடுங்கித்தின்கிறோம் பூமியை நாமின்று,

கம்சனை இம்சித்து நசித்தாய் கண்ணா! - கலியுக 

மாமன்களிடம் பத்திரமாய் இருந்துகொள்...


நீ தயிர்கேட்டுப்போனால் கண்களிரண்டை 

விலைகேட்பான், நீர்கேட்டு மாமன்வாசல் போனால் 

கண்ணா! சிறுநீரகம் வாங்கிக்கொண்டு சில்லறையை 

கொட்டிவிடும் மாமன்கள் நிறைந்த மண்டலம் இது.


உன் புல்லாங்குழல் பிடுங்கி அதில் புகையிலை

எரிக்கும் புதுமாமன்கள் நிறைந்த நிலமிது,

போதை தருமிசை குழலூத, போதைப்பொருள் 

விற்கும் ராதைகள் நிறைந்துவிட்ட நிலமிது, 

கண்ணா ராதைகளைத் தேடித் தொலைந்துவிடாதே.

-சி.சதுர்



 



 


 




Comments

Popular Posts