சீதாயணம்
சீதைகளின் சிதைகளில், ஸ்ரீராமர்களின்
சந்தேகங்களும் இராவணனின் கன்னியமும்
மலர்வளையங்களாக சாத்தப்பட்டிருந்தன...
பூவின் கன்னிமை சந்தேகிக்கப்பட்டதால்
மலர்வளையங்கள் கிழித்தெறியப்பட்டன.
செந்தீ சொன்ன சத்தியத்தை மறந்து இன்று
சீதைகளை சுடுகிறது - உடல்
வெந்தே போயினும் சீதைகள்
சாதங்களை வேகவைக்கவே விரைகிறார்கள்.
இராமர்களோ வெந்த சாதத்தை பதம்
பார்த்துவிட்ட கும்பகர்ணர்களாக ஓய்வெடுக்க,
குசேலர்களின் கூரைகளிலிருந்து
ஓலைப்பாய்கள் உருவப்படுகின்றன.
சீதைகளை நாடுகடத்தும் அனுமர்களின்
வால்கள் வங்காளம் தொட்டு வடஅமெரிக்கா
வரை பாலம் தொடுக்கின்றன,
ஜானகிகள் நாடுகடத்தப்படும் தேசத்தில்
ஜனநாயக ஆமைகள் ஓட்டுக்குள் ஒளிந்து கொண்டன.
கீதைகளை விற்றுவிட்டு பாரதப்
போர்களை பற்றிக்கொண்டோம்.
சீதைகளை எரித்து அதில்
செந்தூரப்பொடி எடுத்து பூசிக்கொண்டோம்.
நாடுகடந்த ஜானகிகளை
மாயமான்கள் துரத்துகின்றன,
மாயமான்களை பிடிக்கப்போனவர்கள்
சீதைகளை சிறைபிடிக்கிறார்கள்...
அனுமன் ஆகாயத்திலிருந்து பார்க்கிறான்,
அகிலம் முழுக்க அசோக வனங்கள்.
இது கலியுக ராமர்களின் அசோகவனங்கள்,
பூக்கள் புன்னகைக்க மறந்த சோகவனங்கள்...
-சி.சதுர்
Comments
Post a Comment