ஆயிரம் வானங்கள்

மங்கலமான ஒரு மரண செய்தி,

வெண்கல நிலவும் வாடகை சூரியனும்

வானத்தை முத்தமிடவே வெட்கிச் செத்தது

செவ்வானம், வேடிக்கை பார்த்தன ஆயிரம் கண்கள்.

 

செவ்வானத்தின் இலவு செய்தி கேட்டு

இருட்டைப் பூசிக்கொண்டன அதன் சொந்தங்கள்,

ஆயிரம் கண்ணீர்த்துளிகளை அணிந்துகொண்டு

ஆகாசம் தன் இறந்த காலத்துக்கு இரங்கல் தெரிவித்தது.

 

ஒவ்வொரு மனங்களும், ஒவ்வொரு வானங்கள்,

பல வானங்கள் இன்னும் விடியலை காணவில்லை,

சில வானங்களில் வானவில் வளையல்கள்.

பல வானங்கள் விடியலை காண்பதில்லை அவை...

 

விடியலுக்காக வருத்தப்படுகின்றன,

விடியலின் வெப்பத்தில்

வாடிப்போகும் பனிப்பூக்களுக்காக,

விடியலின் வெளிச்சத்தில்

அவமானப்படும் நட்சத்திரங்களுக்காக,

இரவின் வெள்ளி ஜன்னல்

சாத்தப்படுவதை ஒப்புக்கொள்ளாத

அந்த வானங்கள் விடியலை வெறுக்கின்றன.

 

வானங்களே இல்லாத மனங்களும் உண்டு,

அவை வெறுமையை சுவாசித்து வெறுப்பை உமிழும்.

பணத்தை சுவாசித்து பாவத்தை பொழியும்

வானங்களும் உண்டு, அவை வாக்கை விற்று

வாக்குகளை உறிஞ்சும் அரசியல் தெரிந்த வானங்கள்.


-சி.சதுர்


 

 

 

 

 


Comments

Popular Posts