கோவலனின் கொலைவாள்

அம்புலிகள் அணைத்துக்கொள்ளும் மேகத்திடம்

வெம்புலியாய்க் கதிரவனும் பாய்கையிலே,

வெம்பி வெம்பி விழிசிவக்கும் வானமெலாம்

மேகவரிப்புலிகளின் கால்தடங்கள்.

 

மாலைமானை வேட்டையாடிய களத்தில்

மரையிறைச்சி துண்டாடிய போர்க்களமாய்

மாலைவானம் குருதிவரிகளில் குருஷேத்திர

மாகாவியம் ஒப்புவிக்கும். பரிதிமுத்தம் பட

வானம் பரிதவிக்கும் அதன் இறுதிமுத்தம் பட்ட

பின்னே அதன் விளக்கணைக்கும்...

 

இருண்டபின்னே வானம் புன்னகைக்கும்

புன்னகை மின்மினிகளின் புன்சிரிப்புகள்

கண்ணகி கால்சிலம்பின் வைரங்களாய்

பாண்டியன் முற்றத்தை பதம் பார்க்க

இருண்டு போனது அரசவை...

 

வானத்தின் வெள்ளிமணிமுடியின் கீழொரு

வெறுமை - வேந்தன் விழ வேறொருவன்

ஏறும்வரை இருண்டது அரியணை.

மேற்கிருந்த அரியணையின் எதிர்புறத்தே

மூண்டது கண்ணகியின் கோபம்,

மேகங்கள் பற்றிக்கொள்ள - விழித்துக்கொண்டது

பாண்டியர்களின் நிலா முற்றம்...

 

மீண்டுமொரு கோவலனின் சிரமறுக்கும்

கொலைவாளை கூர்தீட்ட கொல்லர்கள்

புறப்படவே - தொடுவானம் காத்திருக்கும்

கொலைவாளை முத்தமிட்டுச் செத்துப்போக...




-சி.சதுர்


Comments

Popular Posts