கண்கள் இரண்டால்

தேயும் என்புக்கூண்டுக்குள் 

காயும் உயிர்கள், 

என்மானம் தேயும் மென்னென்பால் 

வளர்ந்து இனம்பெருகும் 

கொடிமரங்கள் கூட்டம் அது, 


காகங்கள் காலைக்கடன் செய்யும் 

கொடிமரங்கள் கூட்டம் அது, 

அடிமரங்களில் கோடலிகள் ஓய்வெடுக்க  

நுனிக்கொம்பில் ஆடும் கொடிகள், 

அவைதம்முள் தம் நிறமே - தலை நிறம்

என்று வண்ணக்கொடிமணிகள் வாய்சவடால் விடும்.


பொன்னிறமாம் பூ பூக்கும் முகம், 

அந்த புன்னகைப்

பூவிற்கு கண்ணோரத்தில் ஒரு 

கறுப்பு நாள் காத்திருந்தது.

கண்காணும் வண்ணங்களில் ஒளிந்து

கொள்ளும் கறுப்பு வெள்ளைகள்.

   

வெண்ணிறத்தில், செந்நிறத்தில், 

காவி நிறத்தில் கரைவேட்டிகள்.

மேழை'கோட்'டின் நிறத்தில் 

கடன்மேகங்கள் மழை நீரை வசூலிக்கும்.

கரைவேட்டிகள் மழை நீரை உறிஞ்சி

கண்ணீரை கடனாகக் கொடுக்கும்.


கண்கள் இரண்டைக் கட்டியணைக்கும்

கண்ணீர்மணிகள், விட்டுப்பிரிய

எண்ணாத விழியின் மடல்கள்,

கன்னத்தில் கைவைத்து பார்த்துக்

கொண்டிருக்கும் குடிகள், இந்த

அரசியல் நாடக அரங்கேற்றத் திரை

மூடும் வரையில் எங்கேனும் அதில் 

அறம்-இயல் அரங்கேறுமா? - தேடுகிறேன்

என் கண்கள் இரண்டால்...


கடமையின் கானல் விம்பங்கள் மட்டும்

கண்களில் தட்டுப்பட, 

புண்கள் வரண்டால் புதுத்தோல் பூணும் 

உடலில் எம் கண்கள் வரண்டால் 

காணும் க(கா)ட்சியெல்லாம் காசு பணமே...

-சி.சதுர்



Comments

Popular Posts