கடைசி தேநீர்விருந்து...

கடைத்தெருக்களில் முளைக்கும் காளான்வரிசை,
உடை நனைக்கும் சூரியனுக்குக் கீழே
நடைவண்டியாய் நகர்கிறது நடைபிணவரிசை,
மண்சுமந்து புண்பட்ட மலைவாசிகளின் வரிசை.

தேயிலைகளுக்கிடையே சாயம்போன முகங்கள்
மரங்களுடன் அங்கே மனங்களும் கவ்வாத்து
செய்யப்படுவதால் தளிர்கள் தயங்கித் தயங்கியே
தலைகாட்டுகின்றன, கம்பனிக்குப் பாத்தியப்பட்ட...

கரங்களால் கிள்ளப்பட்டு, தளிர்கள் வெந்துபொடிகளாக
தரம் பிரிக்கப்பட்டு ஏறும் கப்பல்களில்
வியர்வைகளும் மலிவாகவே 
ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மழைக்காலத்தில் மவுசு பெறும் குடைகள் போல 
மலைக்கிராமங்களில் இலைகளுக்கே
மவுசு, விரல்களின் கீறல்களை விரும்பும் 
அட்டைகளால் வியர்வைகளுக்குப் பதில்
செவ்வுதிரங்கள் ஏலத்தில் விலைபேசப்படுகின்றன...

மலைவாழும் மனிதர்கள் பொருளாதாரம்
பாதாளத்தில், புனிதர்கள் பாதம் பட்ட
சிகரங்களில் சிறுபான்மை சிறைவாசம்,
சிவனின், ஆதாமின் மலைகளின் மறைவில்
கொழுந்துகளோடு கனவுகளும் கிள்ளியெறியப்படுகின்றன...

பச்சைக்குவியலில் உதிரங்கள் உரமாகுது,
இச்சைக்குவியலில் இதயங்கள் ரணமாகுது,
பிச்சைநாட்டில் பிழைத்திருக்க மலை-
உச்சியில் உலைவைக்க விலை-வாசிக்காற்று
ஊதித்தள்ளுது உலைநெருப்பை.

கச்சைசாரமெல்லாம் சாராயத்தில் 
துவைக்கப்பட்டு புழுதியில் புரண்டுகொள்ள,
தேநீர்க்காட்டில் சேலைகள்
கண்ணீர்களால் சலவை செய்யப்பட்டன...

வலிகளை உற்பத்தி செய்து வேதனைகளை
விலைபேசும் விருந்தினர்களின் 
தேநீர்விருந்து நடக்கிறது,
விரல்கள் ஓரம் பட்ட விழிகளின் ஈரத்துக்கு
என்ன விலை கொடுக்கலாம்?


-சி.சதுர்


Comments

Popular Posts