மௌனத்தின் வரிகள்

மௌனங்களுடன் ஒரு பேச்சுவார்த்தை,
மனங்களின் மொழியுடன் ஒரு பேச்சுவார்த்தை,
பிள்ளையார்சுழி போடுமுன்பே முற்றுப்புள்ளி
வைக்கப்பட்ட வார்த்தைகளுடன் ஒரு பேச்சுவார்த்தை.

பேசாத ஊமைஉலகத்தில் இது ஒலிக்கப்
போகும் முதல் சொல்.
பேசமறுக்கும் மனங்களின் சாவித்துவாரங்களின்
கண்டெடுத்த முதல்சாவி.

ஊமைகள் உலவும் மௌன உலகின்
ஏழ்மையின் ஊமைத்தனம் உடைக்கும் முதல் சொல்,
தாழ்வுமனப்பான்மை தலைக்கு மேலே,
தட்டுத்தடுமாறுது நாக்கு பல்வரிகளிடையே...

மௌனத்தின் வரிகளாய், அந்த வரிகளின்
பொருள்களாய் வாழ்ந்து வெந்த
வாடகைத்தாய்களின் வாரிசுகள் போலே
வாடகைவார்த்தைகளை உச்சரிக்கப் பழகிவிட்டோம்...

பீடிகைபோட்டு நச்சரிக்கும் கிழவிகளின்
பேரன்கள் பேஸ்புக்கில் பிரச்சாரம்,
நடிகை வீட்டு நாய்க்குட்டிகள் வாலைமடக்கி
நடந்து வருவது போல நாவைமடக்கி 
கடந்து போகிறோம் பூக்களை மிதித்துக்கொண்டு...

பூக்களின் இதழ்களில் ஊழல் பிரசுரமானதால்
காம்புகள் கற்பழிக்கப்பட்டன.
கரவை மாடுகள் ஆராய்ச்சிமணியில் 
கைவைத்ததால் கன்றுகள் மேல் தேர்கள் ஏறின.

உண்மைகளின் சிதைகள் மேல் உட்கார்ந்து
கதைகளின் சுளைகளை சுவைத்துக் கொண்டிருக்கிறோம்,
கனிமரங்கள் களையப்படுவதை மறைத்து, மஞ்சள்
கிண்ணங்களில் பழரசம் புகுட்டப்படுகிறது...

வதந்திகளும் வாதிகளும் அரளிப்பூச்சொரியும்
இறுதிச்சடங்குகளில், பொய்களும் பேனைகளும்
சம்பந்திகள் ஆயின - அந்த பொம்மைக்கல்யாண
மஞ்சள் பத்திரிகைகளில் பேனைகளின் 
சாம்பல்கள் அடியில் புதைக்கப்பட்ட ஊழல்கள்...

மஞ்சள் பத்திரிகையின் செய்திச் சாவுகளுக்கு
பூக்கள் சொரியும் பேனையின் காம்புகள்,
அஞ்சலிகளால் ஒரு தலைப்புச்செய்தி, 
அதிகார சுண்டெலிகளுக்கு முதுகுசொரிந்து
மழுங்கிப்போன எழுத்தாணிகளால்
மௌனத்தின் வரிகளையே பிரசவிக்க முடிகிறது... 

-சி.சதுர்






Comments

Popular Posts