இப்படிக்கு சோழன்!

ஈழம் கொண்ட எல்லாள குலமதில்

வேழம் துயின்ற இராஜாதித்தன் நிலமதில்

ஞாலம் வென்ற கரிகாலன் குலமதில் 

சோழம் சொல்லும் சொர்ணத்தமிழ் சூட வந்தீர்  


முத்திசை திரும்ப முக்கொடி படபடக்க 

முத்திரை பதித்த மீன்கொடி துடிதுடிக்க 

சத்துரு உதித்த புலிக்கொடி நகம் கடிக்க 

சத்திரிய உதிரம் மண்குடித்து நிலம் சிவக்கும் 


போர் எனும் பாலைவனத்து இரத்தக்கள்ளி,

தூர்வார மறந்து போன இரத்தக்குளத்தின் 

நார்கமலம் கண்விழிக்கும் போர் பொழுதில் 

புலிகளும் மீன்களும் நீந்தும் போர்க்குளத்தில்...


போர்க்குளம் நீராடி புண் அணிகலனாக்கி,

ஏர்க்குலம் நீரோடும் கயல்மீன்கள் வாய்காலில் 

வயலாடும் கயல்மீனை கரம் குவித்து,

உள்ளங்கை உழலும் மீனை கண்களால் உழும் புலிகள்...


புலிநகங்கள் வேலிகட்ட உள்ளங்கை சமுத்திரத்தின் 

கழிமுகத்தில் வாலறுந்த கயல்மீன்கள் வஞ்சம் கொள்ளும்

வயல்மீன்கள் வாழ்த்தும், அந்த வளவன் இரைத்த 

வயல்நீரில் வம்சம் வளர்க்கும் வயல்மீன்கள்.


ஆடும் அலையாடும் கலங்களும்,

ஆடா நிலையாடா கோபுரமும்,

விடையாகும். வீரத்தமிழ் பூத்த சோழதேசம் 

உடைவாளும் வெண்குடை ஆளும் சோழ நிலம் நீளும் போர்க்களங்கள்.


போர்சுட்ட புண்ணை போர்த்திக்கொள்ளும் நிலமே 

நார் கழன்ற தசைகள் நெலியும் களமே

யார் கண் படவோ தொலைந்த தொல்குலமே 

பேர் கொண்ட வளவா தொலைதேசம் மீட்போம்!


கொண்ட நிலம் கைவிட்டுப் போனாலும்கூட

கொற்றவை குலம் கையை விட்டாலும் கூட 

ஆண்ட மண் ஆருயிரை அணைத்தாலும் - எனை 

பெற்ற மண்ணே போய் வருவேன் 

இப்படிக்கு சோழன்...

-சி.சதுர்


Comments

Popular Posts