குருதிச்சாரல்

மேகத்தின் சுருக்கங்களில் மூடிக்கொண்ட நீர்க்கண்கள்

தாகமெடுத்த தரிசுகளில் நிலவுதடுகளின் வெடிப்புக்கள்

போகமெடுத்த புஞ்சைகளில் வெம்புழுதி விரிப்புக்கள்

மேகம் கஞ்சம்காட்டிய பஞ்சத்தின் பள்ளத்தாக்குகள்

 

கருக்கொண்ட மேகம் தீட்டை நிறுத்த,

உருக்கொள்ளும் வயிற்றில் நீர்க்குடம் நிரம்ப,

பிறக்கின்ற புதுமழையின் குரலோ – மனம்

மறக்காத மேகமழலையின் சாரல்...

 

காய்ந்த கட்டாந்தரைகளில் மேகதாளங்கள்

பேய்ந்திடும் துளிகளில் மோக ஸ்ருதிகள்

மாய்ந்திடும் மேகமே மழையும் தீர்ந்திட

தேய்ந்திடும் வானவில் மேகத்தைச் சேர்ந்திட

 

காகிதக்கப்பல்கள்- கடல்தாண்டும் கரன்சிகள்,

துரோகிகள் அழுகையில் பாவத்தின் சலுகைகள்

புதைமணல் முதலைகள், புரட்சியின் சிலுவைகள் இந்த

கதையிலே வரும் இவை மேகத்தின் திருடர்கள்

 

மழையைத்தந்து பிழைகளை கழுவிடும்

மேகத்தின் கண்களில் துரோகத்தின் ஈரங்கள்

தூசிகள் விழுந்திடக் கலங்கிய கண்களில்

ஊசிகள் விழுந்திட கலங்கிய மேகமே...

 

வானமும் கலப்படமாகிவிட புளுணிகள்

கானத்தின் கிளைகளிடை மறைந்தே

வானத்தை வெறிக்கின்றன. பறப்பதற்கு

இடமில்லை வானத்தில்...

 

அணுகுண்டும் ஆயுதங்களும் பயணிக்கும்

மேகங்களிடையே ஆட்காட்டிகள் பறந்திட

எண்ணினால் மேகங்களில் குருதிச்சாரல்தான்.

கிளைகளில் குருவிகள் – பிரசவிக்கப்படாத

மழைக்கான காத்திருப்பில்...



-சி.சதுர்

Comments

Popular Posts