கல்லூறும் கவியே...

கல்லூறும் கவியே, சொல்லூறும் செவியே 

சொல்லூறிய செவியில் கள்ளூறும் மொழியே!

கல்லாரும் சுவைக்கும் கலங்கமில் கவியே!

நல்லாரின் அவையில் விளங்கும் இன்கவியே!

 

உள்ளூறும் உவமை, உருவகத்திலோர் உண்மை,

பொய்கூறும் புலமை பொலிந்த நன்கவியே!

பொலிவிலோர் எளிமை பொருளிலே இனிமை

தெளிவிலே பிறந்த தெம்மாங்(கு) கவியே!

 

விரலின் வியர்வைத் துளி பட்ட தாளில்

விரியும் வரிகள் பிழையே, - வார்த்தை

வந்துதிக்காவிடில் வதங்கும் விரலின் இதழே,

விரலின் இதழில் வழியும் பனிக்கவியே!

 

உரலின் ஒலிகொட்டும் சந்தங்கள் 

உறையும் செய்யுட் பத்தி,

திரளும் பொருள் கொட்டும் கிண்ணங்கள்

உறைக்கும் மெய்யுட் புத்தி. 

 

பறையும் பரதமும் மெட்டுக்கட்ட,

குறையும் ரசத்தை உரிச்சொல் இட்டுக்கட்ட,

பொருள்பல திரியும் சிலேடை முட்டிக்கொள்ள

இருள்கெட இமைதிறந்தாய் அரும்கவியே

 

பொருள்கெடா புதுக்கவி புனைந்திடு

அகம்கெடா நிலைநாடிச் சேர்ந்திடு

யுகம்கெட்ட நிலைமாற்ற நிமிர்ந்தெழு

இகம்கெடும் காலமிது, கரைசேர்ந்திடு...

 

-சி.சதுர்

 


Comments

Popular Posts