காகிதப்பூக்கள்
மணல்மீதிலே
உருளும் நுரைபோலவே,
கரைமோதிடும் ஒரு அலைபோலவே கனவுகள்,
நான் கனாக்காணத்தான்
அந்த நிலா தேய்ந்ததே,
நிலா தேயவே என்
கனா மாய்ந்ததே.
கோடியிருளில்
குவிந்த சுமையில்,
வாடிநெளியும்
விழியின் மடலில்,
வானவெளியின் வாசற்படியில்,
வாசம் செய்யும்
விண்மலர்கள்.
விண்மலர்கள்
உதிரும் வெளியில்,
கண்மலர்கள்
புலறும் ஒளியில்,
பனிமலர்கள்
புல்லின் நுனியில்,
தனிமலராய்
உதிர்ந்தேன் இலைநுனியில்.
இடையிற்
குடம்தாங்கும் பூவின் காம்புகள்,
குடையுற்
மழைபொழியும் காளான் வீடுகள்,
மழையின்
மழலைகள், நீர்வரைந்த கோடுகள்.
தொலைந்தேன் கோடுகளிடையே
கவிதையாய்.
மழைவந்து மண்ணோடு
மேகம் கொண்ட உறவை
புதுப்பித்துச்
சென்றது – உறவுகள்
கண்காட்சிப் பொருட்களான
பிறகு, இங்கு
மழைபெய்தென்ன, மனங்கள்
பூக்கவா போகின்றது...
நிறைமாத
நிலாவிடம் ஒருகுடம் ஒளிவாங்கி,
ஒளிகாலும்
அல்லிகளே! நிலவு விட்டுப்பிரிகையிலே
மொட்டுத் தரைதட்டும் மல்லிப்பூவே! பூமாலையாய்
கருவறை சிலைகளை சேர்கிறாய்
வாடாமல் வாசம் தந்தே
வாடிக்கையாளர்
வந்தபின்னே சிலைகளிடமிருந்து
விலைதரும்
தலைகளுக்கு தாவுகிறாய்.
பூமனம் இதுதானோ,
காதல் சின்னமல்ல
இது கையூட்டின் சின்னமல்லோ?
பூக்களை மோகிப்பதால்
பூச்சிகள் நசுக்கப்படுகின்றன.
மகரந்தம் தொட்டு
மலர்தாவி மலர்தாவி
மலர்தொடுக்கும்
பூச்சிகளே!
உங்களை நிராகரித்துவிட்டு
சட்டத்தின்
பூக்கள் ஊழல்க்குரங்குகளை
மணந்து
கொண்டு அவை பூமாலைகளை
பெற்றெடுத்து
காதில் சுற்றுகிறார்கள்....
எல்லைவேலியில் எருக்கிளைப்பூவொன்று
அந்தப்பக்கம் தலைசாய்க்க, துண்டிக்கப்பட்டது,
பூவோடு அங்கே புலம்பெயர
முயன்ற காற்றும்.
காற்றுக்கென்ன வேலி
எல்லாம் பழங்கதை...
காகிதப்பூக்களையே
நேசிக்கிறோம்
காற்றையும் கடன்வாங்கி
சுவாசிக்கிறோம்
மக்களின் நிழல்களில்
மந்திரிகளின் மாடிவீடுகள்,
பூக்களின் நிழல்களில்
பூதங்கள் குடியிருப்பு.
காத்திருந்த
பூதமொன்று கண்களிடமிருந்து
கனவுகளை
பரித்துப்போக ஒளியில்லா
விழிகள் போல
இருண்டு போனது உலகு,
கண்கொத்திப்
பூதங்கள் கிளம்பிடவே.
கனவு வானத்தின்
இதயநிலாவை எங்கிருந்தோ
வந்து
களவாடினான், இமைகளிரண்டை
இழுத்து
பூட்டினாற் போல் இருண்டு போனது கனவு.
குருடர்கள் கூட்டத்தில்
நானும் குனிந்துகொண்டேன்.
காலம் பதில்சொல்லும், காயங்கள் மாயமாகும்
என்றே சிலம்புகளொடு
கண்ணகிகள்
காத்திருக்கிறார்கள், இந்நாட்டில் காகிதப்பூக்களையும்
கனவுகளையும் களவாடும் கும்பலிடம்
நியாயம் கேட்கவே...
Comments
Post a Comment