ஆஃப்கானின் யசோதாக்கள்

 சோகத்தாலாட்டொன்று கேட்கிறது,

தாகக் குரலங்கே தவிக்கிறது,

கனவுகள் பிடுங்கப்பட்டு அங்கோருயிர்

கண்மூடிக் கிடக்கிறது, இமைகள் ஓரமாய்

காயமெல்லாம் ஈரமாய்...

 

நாகரிக நரகாசுரர்கள் நகைக்கும்

நிலையிலே பெண்சிலையும் கற்பம்

தரிக்கிறது- சிற்பிகள் கைகளிலே

கறை வடிகிறது. காற்றும் காதோரமாய்

அழுதுவிட்டு போகையிலே கண்ணீரின் வாடை.

 

கண்ணீரோடு குருதியும் கேட்கிறான்

இறைவன். கண்ணீரிலே வாழ்கிறோம்,

கொட்டும் குருதிகளை கழுவிக்கொண்டே,

நிலவொரு பெண்ணாக மாதவிலக்குகளில்

விலகிநிற்பதால் விடியல்களில் இரத்தக்கறைகள்.

 

விடியல்கள் புதைக்கப்பட்டிருந்தன

நேற்றுவரை. அவை புதைத்த இடத்தில்

இன்று துப்பாக்கிகள் முளைத்து தோட்டாக்கள்

உதிர்ந்து கிடக்கிறது தோட்டாக்கள்

துளைத்த இடத்தில் சட்டத்தால்

தையல் போடப்பட்டது.

 

பர்காக்களின் நூலினால் கனவுகள் தைக்கப்பட்டு,

தலிபான்களின் கைகளில் எம்

தலைவிதிகள் எழுதப்பட்டன.

அடையாள அட்டைகளை மட்டும்

அலங்கரிக்கும் எம் முகங்கள்,

ஒப்பனைகளை கேட்கவில்லை -எம்மிடம்

பறித்துக்கொள்ளப்பட்ட பேனைகளை

தந்துவிடுங்கள்...

 

மலாலாக்கள் வழிசமைத்த பூமியில் எம்

மழலைகளின் பாதைகளை பூட்டிவிட்டார்கள்.

போர்களின் போர்வையில்- எம்

புன்னகைகளை பிடுங்கிக்கொண்டார்கள்.

பேனைகளை முறித்துவிட்டு புத்தகங்களை

கைது செய்கிறார்கள்...

 

காலடி ஓசைகளையும் தடைசெய்ததால்

பயணங்கள் எம்மிடம் விடைபெற்றுக்கொண்டன.

ஆறடி சிறைகளில் சாணளவு இதயங்கள்

ஓசையில்லாமல் துடிக்கின்றன. – எம்

மூச்சுக்காற்றின் வெப்பம் மட்டுமே ஒரு

உயிரின் இருப்பை ஊர்ஜிதம் செய்தது.

 

எம்

குரல்களை ஆஃப்கானின் ஆயுதங்கள் கேட்கும்வரை,

மௌனமாக இருப்பதற்கே உரிமைதரப்பட்டது...

மறுப்புக்களை தெரிவிக்க மசோதாக்கள்

கொண்டுவரப்படவில்லை.

 

கண்ணனின் வாயில்

அகிலத்தை கண்டாள் யசோதா,

பர்காவின் துவாரங்கள் வழியே

அழிவுகளையே காணும்

-ஆஃப்கானின் யசோதாக்கள்

 



-சி.சதுர்

Comments

Popular Posts