லெமூரியச்சிறை

ஈராறு உயிரோடு மூவாறு உடல்மூட்டி

மூண்டதெம் மொழியே! நாவூறும் கவிதை

பாவூறும் சொற்கள் கொண்டதெம் மொழியே!

கள்ளூறும் சொற்களில் கலையூற்றின் சாரல்கள்

சொல்லூறும் கவிகளில் சுனைநீரின் தாளங்கள்


கல்லூறும் கட்டெறும்பின் கால்களில்

கல்லுளியை கட்டிவிட, கல்தோன்றிய 

சித்திரமாய் கல்வெட்டுகளில் உன்

சின்ன வயது சித்திரங்கள்...


சித்திரங்கள் பேசுவதை செவிகொடுத்து

கேட்கிறேன், முச்சங்கம் அமைத்து

முத்தமிழை முழங்கச் செய்த 

புலவர்கள் கையெழுத்தில்

முற்றுப்புள்ளி தேடுகிறேன்...


தாய்மொழியே நீ தந்த முத்தமிழை

ஐம்புலனும் முழுதாய் அடைந்திடவே,

இப்பிறவி  முடிந்திடுமே.

ஈரேழு பிறவி எடுக்க வேண்டும் நானிந்த

செம்மொழியைச் சுவைத்திடவே!


பூவொன்று மீண்டும் மொட்டாக

ஆசைகொண்டேன் புதுக்கவிதை 

உனக்களிக்க. - அழகிய

தீவொன்றை மீண்டும் தரிசாக்க

ஆசைகொண்டேன் அதில் லெமூரியாவை

சிறைப்படுத்த...


முத்தமிழாய் நீபிரிந்து முகம்காட்டி

நிற்கையிலே எத்தமிழை முதல்வணங்கி

இக்கவிதை நான் தொடங்க?

இயலிசை நாடகவெள்ளத்தில்

ஈங்கிவன் குதிக்கிறேன் கவிதைத்தெப்பமாக...


சொற்செல்வம் குவிந்த இயலும்

நற்செல்வமான இசையும்

கட்புலச்செல்வம் நிறைந்த கூத்தும்

மொழிக்கடலின் ஆழம் கண்டு யாம்பெற்ற

முத்துக்களே தாய்மொழியின் வித்துக்களே


எத்துனையாய் பிரிந்த போதும் தமிழ்

முத்தனைய எம் தாய்மொழியன்றோ

எத்துனையாய் நாம் பிரிந்த போதும் நாம்

அத்தனையும் தமிழர் அன்றோ

ஒற்றுமையாய் உரக்க ஒலிப்போம்

நம்மொழியே செம்மொழியென்றே

-சி.சதுர்









Comments

Popular Posts