இருளின் சுவாசம்

நிலவை மட்டுமே நேசிக்கிறேன் 

நட்சத்திரங்கள் கண்ணடிக்கின்றன

வெயிலுக்கு மேகக்குடை கேட்கிறேன்

மேகங்கள் மழையாக இடியிடிக்கின்றன


இரவை எடுத்து சுவாசிக்கிறேன்

நுரைப்பை நூறு ஜன்னல்கள் படபடக்கின்றன

இருளை எடுத்து வாசிக்கிறேன்

இமைகள் கனவுகளை யாசிக்கின்றன...


கடிகார முட்களின் இதயத்துடிப்பு 

காதோரம் வந்து காலம் உயிருடன் 

இருப்பதாய் உளவு சொல்லியது

விடிகாலைவரை நானும்தான்...


அகல்விளக்குகளை தூண்டிவிட்டு

அணையா விளக்குகள் நித்திரை 

விழித்தன, கனவுத்திரிகள் காலைவரை

எரிந்து கொண்டிருந்தன...


அரசியந்திரத்தின் அச்சாணிபோல

பயனின்றி சுற்றிக்கொண்டிருந்தது மின்விசிறி,

விளக்குகளின் அஸ்தமனத்தில் வீட்டுப்பல்லிகள்

விட்டில் பொறுக்கப் புறப்பட்டன


கட்டில் மேலிரு விழிகளின் மணிகளில்

இருளின் சுவாசம் படவே, பொங்கும் அலை

புரண்டு கடல் கசியும் இமைவழியே...

திரளும் வெள்ளம், தலையணையில் ஈரம்...


-சி.சதுர்


 



 

Comments

Popular Posts