காற்றின் சிறை

கதைசொல்கிறாய் காற்றே - என்பால்

உன் கதை சொல்கிறாய் - அன்பால்

நிறைந்த வாசல்கள், முட்கள் முளைத்த கதவுகள்,

நீ தட்டியும் திறக்காத ஜன்னல்கள் - நீ கடந்த

பாதை நடந்த யாவும் காதில் சொல்கிறாய் 

நீ ஊதியணைத்த மெழுகுவர்த்திகளுக்காக

பாவமன்னிப்பு கேட்கிறாய்,

நீ விசிறிய தூசியால் கண்ணீர் விட்ட 

கண்களிடம் கருணையை எதிர்பார்க்கிறாய்...


ஆனால் நீயோ அதிஷ்டசாலி,

எம் கண்களுக்கு புலப்படாததால்

உன் புலம்பெயர்வுகள் புலனாய்வு 

செய்யப்படுவதில்லை, உன் பிறப்பிடமோ

புகலிடமோ, வேலிகள் உனக்கில்லை.

நீ தழுவி உதிர்ந்த பூக்கள் உன்மேல்

நஷ்டயீட்டு வழக்கு போடுவதில்லை


நீ விளையாட்டாய் கிழித்த 

மேகங்கள் உன்னோடு வழித்துணையாய்

வருமே, வானவில் பூக்களில் மழைத்துளி 

வழிய ஒரு குளியல் போட்டுவிட்டு, என்

ஜன்னலோரம் வந்து சிலிர்த்துவிட்டுப்

போகிறாய்...


சுவாசத் தொகுதியை தொட்டுத் தொட்டு 

போகையிலே சில நொடிகளில் மனதையும் 

முட்டிவிட்டு செல்கிறாய் அந்த மோதலின்

பின்தான் ஒரு நெடுமூச்சு எடுக்கிறேன் 

ஒருகணம் உனை சிறைசெய்து - என்

விடுதலை வாங்கிக்கொண்டேன்...


-சி.சதுர்





Comments

Popular Posts