வானம் வெறுமையாய்...
தினம் ஒரு பக்கத்தை புரட்டும்
வானத்திடம் வரலாறுகளின்
பக்கங்களை இரவல் கேட்கிறேன்
கறையான்கள் மேய்ந்து கொண்டு
இருப்பதால் வரலாற்றுக் காகிதங்கள்
வாடகைக்கு இல்லையாம் ...
நாங்கள் வாங்கிய சுதந்திரத்துக்கு
வட்டி கட்டியே வாழ்கிறோம் - வாங்கிய
கடனை அடைக்க எங்கள் சுதந்திரம்
வெளிநாட்டுச் சந்தையில் விற்பனைக்கு...
வானம் வெறுமையாய், கரன்சி மேகங்கள்
கலைவதற்கு முன்னே சர்வதேச வங்கியின்
வாசல்படிகளில் கடைசிபடிக்கட்டில்
எம் செங்கோலும் கஜானாவும் காத்திருக்கையிலே,
எம் எழுதுகோல்கள் உள்ளூரில் காத்திருந்தன.
அந்த டாலர் மேகங்களை பெய்யுமென நம்பியே
இங்கு பாலர்பள்ளிகளில் காகித ஓடங்களை
மடிக்கக் கற்றுத்தந்தார்கள்...
வானம் வெறுமையாய், இரண்டு கோடி
மீன்கள் தனிமையாய், இந்து சமுத்திரத்தில்
நீந்திக்கொண்டிருந்தன மேற்கிருந்து வரும்
டாலர் படகுகளின் தூண்டில் புழுக்களுக்காக
வாய்திறந்த படியே.
வானம் வெறுமையாய் இருப்பினும் எம்
கனவுகளில் வால்வெள்ளிகள் உதிக்கின்றன
காகிதங்கள் வெறுமையாய் இருப்பதால்தான் புதுக்
காவியங்கள் பதிக்கப்படுகின்றன. எம்
மௌனமே இங்கு பல மகுடங்களுக்கு மறைமுக
வாக்கு அளிக்கிறது.
குட்டித்தீவில் குழுத்தீவுகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும்
நாம் கரைநண்டுகள், அலைவரக் காத்திருந்து
வளைவிட்டு வளைபாயும் சிறுநண்டுகள்
கடனலை அடிக்கும் காலம்வரை கரையிலேயே
காத்திருந்து கடல்நீர் குடித்து தாகம் எடுத்த தரைநண்டுகள்...
Comments
Post a Comment