மஞ்சள் நிலவு...

மழைதேடிப்போகும் மேகமாய்
பிறைதேடிப்போகும் வானமாய்
கரைதேடித் தேடி கால்தடம் தொலைத்தேன்
கடலில் மிதக்கும் ஓடமாய்
கவிதை பேசும் நதியுடன்
கதைகள் பேசி மிதக்கவே
கிளையைப் பிரிந்து நதியில் விழுந்தேன்
ஒரு இலையைப் போலே நானுமே

மதில் மேலொரு பூனையாய்
மனமும் நகர மறுக்கவே,
மதிலின் இருபுறம் கள்ளிச்செடிகள்
மனமோ விளிம்பில் தவிக்குதே.
கள்ளிப் புதரின் நடுவிலே
வெள்ளிப்பூவொன்று மலரவே,
கிள்ளியெறிந்தேன் மனதை 
கருணை மனுவாய்ச் சேரவே

பதிலைத் தேடும் கேள்வியாய்
மழையைத் தேடும் மேகமாய்
மனமோ உன்னைத் தேடிய தேடலில்
மெல்லினமே என்னைக் கண்டுகொண்டேன்
சொல்லினம் தூதுவிட்டேன் உன்
செவிசாய்ப்பாய் என்றே, உன்னைக்
கண்டபின் உள்நாவில் பட்டு 
சொற்கள் உடைய, 
உளறல் மொழி - நான்
பழகிக்கொண்டேன்...

மஞ்சள் நிலவொன்று சித்திரைச்செவ்வானில்
கண்டேன், கனவு ஏணிகள் கோர்த்து 
நிலவிடம் கைகள் கோர்த்தேன்
நிஜத்தில் நெஞ்சுக்குள் வேர்த்தேன்
பூமழை பொழியும் பொழுதொன்றில்
நனைந்தே புன்னகைச் சுரம் 
பற்றிக்கொண்டது. 
மனம் விழுந்த இடம்
மலரின் தடம், அவள் போகும் பாதை 
என் பாதங்கள் தொடும்...



-சி.சதுர்

Comments

Popular Posts